×

பட்ட கடன் தீருமா? வாழ்வில் ஒளி சேருமா?

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 2

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

அலுவலகத்தில்  உணவு இடைவேளையின்போது நண்பர்கள் வருவார்கள். பல விஷயங்களைப் பேசிக்  கொண்டிருப்போம். ஜாதகங்களும் பேச்சில் வரும். அப்படி ஒருநாள் பேசிக்  கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் கேட்டார்.
‘‘சார், கடன் இல்லாமல் ஒருவன் வாழ முடியாதா?’’
‘‘அது எப்படி வாழ முடியும்? நாம் பிறந்ததே கடனைக் கழிக்கத்தானே?’’
‘‘என்ன சொல்லுகிறீர்கள்?’’
‘‘கடன் என்பது கொடுத்த கடன், வாங்கிய கடன் என்று இரண்டு பிரிவாகச் சொல்லலாம். கொடுத்த கடனை வசூல் செய்யவும், வாங்கிய கடனைத் திருப்பித் தரவும்தான் இந்த பிறவி.’’
‘‘அதனால்தான் சில பேர் கொடுத்து ஏமாறுகிறார்கள். சிலபேர் வாங்கிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள் போலிருக் கிறது.’’
‘‘அது  வேறு விஷயம். ஏமாற்ற வேண்டும் என்ற நினைப்பு எல்லாருக்கும் வராது. கொடுக்க  முடியாத சூழ்நிலையில் எத்தனை உத்தமர்கள் தவிக்கிறார்கள் தெரியுமா?’’ ‘‘அதெல்லாம் போகட்டும். ஜாதக ரீதியாக கடன் ஏன் ஏற்படுகிறது? எப்போது ஏற்படும்?’’

நண்பர்  ஜாதகத்தில் குறியாகக் கேட்டவுடன், நான் எனது நண்பர் ஒருவரைப் பற்றிச்  சொல்ல ஆரம்பித்தேன். அந்த நண்பரை நான் 2000 ஆண்டில் சந்தித்தேன். இப்போது 21 வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல உழைப்பாளி. அயராது உழைப்பார். புதுப்புது  முயற்சிகள் செய்வார். ஆனால், பிறந்ததிலிருந்து கடன்.. கடன்... கடன்...  தற்கொலைக்குத் தள்ளும் அளவுக்கு கடன். நிம்மதி இல்லாத நிலை. எனக்கு இவர்  சில வேலைகளைச் செய்து கொடுப்பதாலும், செய்து கொடுத்த வேலையின் ஒரு நேர்த்தி  இருந்ததாலும் இவரிடம் வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அவசரத்துக்குக் கேட்பார்.

‘‘செவ்வாய்க்கிழமை ஒரு பணம் வர வேண்டியிருக்கிறது. வந்தவுடன் தந்துவிடுகிறேன்’’ என்பார். நானும்  தருவேன். ஆனால், பல செவ்வாய்க்கிழமை வந்துபோகும். பணம் வராது. ஆனால்,  வாங்கிய கடனை இல்லை என்று சொன்னதில்லை. கடனைக் கழிப்பதற்காகவே வேலையைத்  தருவேன். சமயத்திலே அதைக்கூட நேரத்திற்குச் செய்து தர மாட்டார். வேறு  இடத்தில் வாங்கிய கடனுக்குப் பயந்து கொண்டு, கடையைப் பூட்டிவிட்டு இரண்டு மூன்று மாதம்கூட வெளியூர் சென்று விடுவார். அப்பொழுது தான் அவர் ஜாதகத்தைக் கேட்டேன். ஜாதகத்தைத் தந்தார். அந்த ஜாதகத்தில் பலப்பல விஷயங்கள் இருந்தன.  அது இங்கு வேண்டாம். அவர் ஜாதகத்தைப் பார்த்து நான் வியந்து போனேன். அவருக்கு நான் சில யோசனைகளைச் சொல்லி உதவிகளைச் செய்தேன். என்ன யோசனைகள் என்பதைக் கடைசியில் தெரிவிக்கிறேன்.

கடன் ஏற்படுவதற்கான ஜோதிட விதி முறைகளோடு, அவர் ஜாதகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பார்ப்போமே.

விதி 1

ஆறாம்  அதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து இருப்பின் அவர்கள் தொழிலில் அகலக்கால் வைப்பார்கள். தொழில் விருத்தி செய்கிறேன் என்று கடனில்  மாட்டிக் கொள்வார்கள். இவர் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனி. பத்தாம் அதிபதி  சுக்கிரன். சனி சிம்ம ராசியில் பூர நட்சத்திரத்தில், சுக்கிரன் விருச்சிக  ராசியில் அனுஷ நட்சத்திரத்திலும் பரிவர்த்தனையாகி இருப்பதைப் பார்க்கலாம்.  என்னிடம் “ஷோரூம் வைக்கப் போகிறேன். ஏஜென்சி எடுக்கப் போகிறேன்” என்று தண்டலுக்குக் கடன் வாங்கியதாகச் சொல்வார். ஷோரூம் போடுவார். வேலை பாதியில்  நிற்கும். ஆனால், மீதி வேலைக்கு பணம் கிடைக்காது. கடையும் வராது. பாதி  ஆசாரி வேலையோடு தண்டல்காரர் மட்டும் தினம் தினம் வருவார். பலமுறை உதவி  செய்து தப்பிக்க வைத்திருக்கிறேன். இது அடிக்கடி நடக்கும்.

விதி 2

செவ்வாய்  ஆறில் அமர, லக்னாதிபதி 6ல் இருந்தால் நிச்சயம் கடன். இவர் ஜாதகத்தில்  லக்னாதிபதி சூரியன் ஆறில் மறைந்து (அதுவும் பகை பெற்று) இருக்கிறார். கடன்  காரக செவ்வாய் ஆறில் இருக்கிறார். அதுவும் செவ்வாய் சுகாதிபதி இல்லையா...  அவன் ஆறாமிடத்தில் மறைகிறார். எனவே, இவர் பெரும்பாலும் கடையிலேயே படுப்பார். வேலை  ஏதேனும் இருந்துகொண்டே இருக்கும். அங்குமிங்கும் அலைந்து  திரிவார். ஆனால், அதில் கால் காசு தேறாது. இவர் தந்தையும் சின்ன வயதில் இறந்து விட்டார். காரணம் ஒன்பதாம் அதிபதி ஆறில் மறைந்து விட்டார். தந்தைகாரகனான சூரியன் 6ல் இருப்பதையும் கவனிக்க, இது உறுதிப்படும்.

விதி 3

குரு  வலுத்து ஆறில் வந்தாலும் 6-ஆம் இடத்தைப் பார்த்தாலும் கடன். இவர்  ஜாதகத்தில் தனகாரகனான குரு வக்கிரமாகி விரயம் ஏறினார். அவர் அங்கு சனியின்  பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். ரோக ஸ்தானமான 6-ஆம் இடத்தைப்  பார்க்கிறார். தனகாரகன் குரு விரயம் போனால் வரவைவிட செலவு அதிகமாகும்.  இவருக்கு அப்படித் தான் ஆகிறது. ஏதோ ஒரு வேலை செய்து நான்காயிரம் ரூபாய்  வரும். இன்னும் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி ஏதாவது ஒரு பொறுப்பில்லாத  செயலில் ஆர்வத்தோடு ஈடுபட்டு இழப்பார்.

விதி 4

லக்னாதிபதியும்  ஆறிலும் ஆறாம் அதிபதி லக்னத்திலும் அமர வாழ்நாள் முழுக்க கடன் இருக்கும். ஜாதகம் பாருங்கள். லக்னாதிபதி சூரியன் 6-ல் இருக்கிறார். ஆறாம் அதிபதி  லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த பரிவர்த்தனை சரி அல்ல. அதுவும் சனி ராகுவோடு இருப்பது இரண்டு சனி அமர்வதுபோல. பிறந்தது முதல் இன்று வரை  இவருக்குக்  கடன் இருக்கிறது.

விதி 5

ஒரு ஜாதகத்தில் சனியும் கேதுவும் சேர்ந்து இருந்தாலும் பார்த்தாலும் கடன் இருந்து கொண்டே  இருக்கும். இவர் ஜாதகத்தைப் பாருங்கள். கேது தனகாரகனான குரு காலில் ஏழாமிடத்தில் இருக்கிறார். சனி வக்ரமாகி லக்னத்தில் இருக்கிறார். இருவரும்  ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்துக் கொள்ள கடன் ஏறுகிறது. இவருக்கு  மனைவியாலும் கடன் தொல்லைகள், அதிகப்படியான செலவுகள் உண்டு என்பது ஜாதகம் சொல்கிற உண்மை மட்டுமல்ல. இவர் வாழ்க்கையை நன்கு அறிந்ததால் தெரிந்து கொண்ட  உண்மை.

விதி 6

லக்னாதிபதி ஆறாம் இடத்தில் பகை பெற்றோ, தீய கிரக சேர்க்கைப் பெற்றோ  அமர்ந்தால் கடன் லக்ன   அதிபதி சூரியன் ஆறில்  பகை பெற் று, பாதகாதிபதி செவ்வாயோடு இணைந்து அமர்ந்து இருக்கிறார் அல்லவா.

விதி  7

குரு  நீச்சம் அடைந்து 6, 8 ,12-ல் மறையக் கடன். இந்த ஜாதகத்தில் குருவும் சந்திரனும் சனி சாரம் பெற்று பன்னிரண்டில் அமர்ந்திருக்கிறார்கள். குரு  உச்சம்  என்றாலும் வக்ரம் அடைந்திருக்கிறார். அதோடு சனியின் சாரத்தில்  இருக்கிறார். சனி 6ஆம் இடத்து கடன் அதிபதி அல்லவா.

விதி 8

இரண்டு உச்ச கிரகங்கள் ஆறாம் இடத்தை பார்க்கும்போது கடன்.

விதி 9

இன்னொரு விதி; உச்சனை உச்சன் பார்த்தால் மிச்சமிருக்காது. இங்கே செவ்வாய்  மகரத்தில் உச்சம். குரு கடகத்தில் உச்சம். இருவரும் ஒருவரை ஒருவர்  பார்க்கிறார்கள். இன்னொன்று கடகத்தில் குரு உச்சம். சந்திரன் ஆட்சி. சந்திர  கேந்திரத்தில் குரு அமர யோகம்தான். ஆனால், யோகம் வேலை செய்யவிடவில்லையே. சுப கிரகங்கள் ஓர் இடத்தைப் பார்க்க அவ்விடம் விருத்தியடையும். இங்கே பூரண  சந்திரனும் குருவும் 6-ஆம் இடத்தைப் பார்க்க அந்த இடம் வளர்கிறது. துரதிருஷ்டவசமாக அந்த இடம் கடனுக்கு உரிய இடம். அதனால் கடன் வளர்கிறது.

இவர் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். சனியின் பிடியில்தான் பிறந்தார். கடனும்  கடின உழைப்பும் அபரிதமாக இருக்கிறது. இவருக்கு 1997 வரை புதன் திசை. தன  லாபாதிபதியான புதன் 5ல் இருந்தாலும், அவருக்கு வீடு தந்த குரு விரயத்தில்  ஏறியதாலும், நட்சத்திரநாதன் சுக்கிரன் புதனுக்கு விரயத்தில் வந்ததாலும்,  பூர்வ புண்ணியம் எடுபடவில்லை. தவிர, காலச்சக்கரத்திற்கு ஆறாமிடமான புதன்திசை பொதுவாக ஏதாவது ஒரு வகையில் கடனை ஏற்படுத்தி விடும் என்பார்கள். அடுத்து சுக்கிர தசை 2023 வரை இருக்கிறது. இதில் 17 வருடம்வரை கடனில்தான் போயிருக்கிறது.

காரணம் சுக்கிரன் கேந்திரத்தில் இருந்தாலும், அனுஷத்தில் இருக்கிறார். அனுஷம் சனியின் நட்சத்திரம். சனி 6ஆம் அதிபதி. எங்கே  சுற்றினாலும் இவருக்கு ஆறாமிடம் வலுவடைந்து, பொருளாதார பாதையில்  தடைக்கற்களை போட்டுக் கொண்டே இருக்கிறது.இவர் பிறந்த தேதி 14ஆம் தேதி.  14 என்பது கூட்டுத்தொகை 5. புதன். காலச்சக்கரத்தில் புதன் ஆறாம் இடத்து அதிபதி. எனவே இயல்பாகவே இவர்களுக்கு கடன் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

எல்லாம் சரி. என்ன தீர்வு?

* வியாதி என்ன என்று தெரிந்து விட்டால் அதற்குரிய மருந்தும் பத்தியமும் சாப்பிட்டு வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது சர்க்கரை  வியாதிபோல. காலம் முழுக்க இருந்து கொண்டே இருக்கும். கட்டுப்படுத்தாவிட்டால் சிறுநீரகத்தையும் இதயத்தையும் மற்ற நரம்புகளையும்  பாதிப்பதுபோல, கடனும் கட்டுக்குள் இல்லாவிட்டால் வாழ்க்கையை சிதைத்து  விடும். எனவே, இவர்கள் கடன் வாங்குவதற்கு முன் ஒரு தரத்துக்கு, இரண்டு  மூன்று தரம் யோசனை செய்து, அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தொழில்  விருத்திக்கு எக்காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கவே கூடாது. கொஞ்சம் காசுவந்து விட்டால் அதை விரயம் செய்யாமல் ஏதோ ஒரு வகையில் சேமிப்பு, முதலீடு செய்துவிட வேண்டும்.

* ஒருமுறை சொன்னேன். எதிர்பாராமல்  ஒரு தசாபுத்தி கோச்சாரத்தில் ஒருதொகை வந்தது. அதை இவருடைய பெண்ணுக்கு நகை  செய்யச் சொன்னேன். இப்பொழுது அந்த நகை மட்டும் மீதம் இருக்கிறது.

* இவர்களுக்கு யாரோ ஒருவர் மேற்பார்வையிட்டு, ஓடும் குதிரையை இழுத்து  கட்டுப் படுத்துவதுபோல, தொழில் கணக்கு வழக்குகளை சரி பார்த்து, நிலவரத்தை அப்பொழுது கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

* தேவையில்லாத புதிய பொருட்கள்வாங்குவதை இயன்ற அளவு தடுத்து விட வேண்டும். கடன் வாங்க “கை பரபரக்கும்”. தனியாக விடக்கூடாது.

* அவசியமில்லாத பொருட்களில் விரயம் செய்யக் கூடாது.

* இயன்ற அளவு, முதல் போட்டு செய்யும் தொழிலைவிட, கைமாற்றி விடுகின்ற  புரோக்கரேஜ் தொழில் செய்வது நல்லது. இப்போது அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். உழைப்பும், வெளிவட்டார தொடர்பு களும், இருப்பதால் இவர் மிகச் சிறப்பாக அந்த சேவைத் தொழிலை செய்கின்றார். அதன்மூலமாக ஓரளவு வருமானம் நிற்கிறது. இரண்டு வருடங்களாக கொஞ்சம் நிமிர்ந்து இருப்பதாகச்  சொல்கிறார்.

* குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லை குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். குலதெய்வமே தெரியாதவர்கள் குத்து விளக்கு வைத்து நெய்யிட்டு  தீபமேற்றி வழிபட வேண்டும். ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால் கடன்கள்  அடைபடும்.

* செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதால் கடன் அகன்று செல்வம் சேரும்.

* கோ பூஜை செய்வதும், பசுவுக்கு கீரையும் பழமும் கொடுப்பதும் காமதேனுவான  பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவதும் செல்வம் சேர வழி தரும்.

* இன்னும் சில வழிகள் உண்டு. அடுத்த பதிவில் காண்போம்.

(இதம் சொல்வோம்)

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி