காதல் திருமணம் செய்த ஜெய், பிரக்யா நாக்ரா தம்பதி, சத்யராஜுக்கு பயந்து வெளிநாடு செல்கின்றனர். தனது குடும்பத்துக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் சத்யராஜ், தனது மகன் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிந்ததும், ஜெய் மீதான கோபத்தை மறந்து, அவரை மீண்டும் தனது ஊருக்கு வரவழைக்கிறார். ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை ெகாண்ட இளவரசு, தனது மகன் யோகி பாபுவை வெளிநாட்டிலுள்ள வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.
‘அங்கு சாய் தன்யாவை யோகி பாபு காதல் திருமணம் செய்ததால் இளவரசு கோபப்படுகிறார். பெண் குழந்தை பிறந்தால் குடும்பம் அமோகமாக இருக்கும் என்று ஜோதிடர் சொல்ல, யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த இளவரசு, அவரை வீட்டுக்கு வரவழைக்கிறார். அப்போது விமான நிலையத்தில் ஜெய், யோகி பாபு ஆகியோரின் குழந்தைகள் மாறிவிடுகிறது. ஆண் வாரிசையும், பெண் வாரிசையும் எதிர்பார்த்திருந்த அவர்களது குடும்பத்தினர் என்ன செய்தனர்? மாறிய குழந்தைகள், மீண்டும் அவர்களுக்கு கிடைத்ததா என்பது மீதி கதை.
காதல், காமெடி, சென்டிமெண்ட் ஆகிய ஏரியாக்களில் ஜெய் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. அவரது மனைவி பிரக்யா நாக்ரா கவனத்தை ஈர்க்கிறார். யோகி பாபு பன்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார். அவரது மனைவி சாய் தன்யா இயல்பாக நடித்துள் ளார். சத்யராஜ் தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். இளவரசு, கீர்த்தனா, ரெடின் கிங்ஸ்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன், நிழல்கள் ரவி, பாப்ரி கோஷ், ராமர், பழைய ஜோக் தங்கதுரை, சேஷு ஆகியோரும் அவரவர் கேரக்டருக்கு ஏற்ப நன்கு நடித்துள்ளனர்.இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. டி.பி.சாரதியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. எழுதி இயக்கிய பிரதாப், குழந்தை சென்டிமெண்ட்டை காமெடி கலந்து கொடுத்துள்ளார். காமெடி காட்சிகளை சற்று மாற்றி யோசித்து இருக்கலாம்.