×

பொய்யுரைத்த தாழம்பூவுக்கே சிவபூஜையில் முதலிடம்!

தயங்கித் தயங்கி கோயிலுக்குள் நுழைந்தது அந்த மலர். அந்த மலரின் மணம் மூக்கைத் துளைத்தது. ஆனால், அந்த மலரின் முகத்தில்தான் சுரத்தே இல்லை. மனம் நொந்து போனதால் மணம் நிறைந்த மலரின் முகம் வாடி இருந்தது. மெல்ல ராஜ கோபுரத்தைக் கடந்து, கொடி மரத்தைக் கடந்து, உள்ளே நடந்து சென்றது. வலது புறத்தில் அம்பிகையின் திருச்சந்நதி அருளை வாரி வழங்கியபடி இருந்தது. அதைக்கண்ட அந்த மலர் கை குவித்தபடியே கண்களில் நீர் சொரிய அந்த சந்நதிக்கு அருகில் சென்றது. “தங்காதலி அம்மன்” அழகாக சேவை சாதித்த படி இருந்தாள். “தங்காதலி அம்பிகையா”?, பெயரே விநோதமாக இருக்கிறதே! என்று வியந்து போனது அந்த மலர். ஆதியில் தட்சன் செய்த வேள்விக்கு ஈசன் அனுமதி இல்லாமல் சென்று விட்டாள் அம்பிகை. அதனால் கோபமடைந்த ஈசன், பூமியில் மானுடப் பெண்ணாக பிறக்கும்படி அம்பிகையை சபித்து விட்டார். பூமியில் பிறந்த அம்பிகை, தன் பிரானை நோக்கி இங்கு தவம் இருந்தாள்.

அவளது தவம் கனிந்த சுபவேளையில் ஈசன் காட்சி தந்து ‘என் காதலியே’ என்று அழைத்து அவளை ஆட்கொண்டாராம். அதன் காரணமாகவே அம்பிகைக்கு இந்த திருநாமமாம். தல புராணம் கூறும் இந்த அதிசயத் தகவல், அந்த பூவின் நினைவுக்கு வரவே, பொங்கிய ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு அம்பிகையை தரிசித்தது. அந்தப் பூ. “என்னை எடுத்து உதவியதுபோல, உனக்கும் அருளுவான் ஈசன்!” என்பது போல அம்பிகை ஒரு மர்மப் புன்னகை பூத்தாள். (ஆதிசங்கரர் கூட இந்த அம்பிகையை வணங்கியதோடு இல்லாமல், சக்ர பிரதிஷ்டையும் செய்திருக்கிறார்! அந்த  சக்ரத்தை இன்றும் ஈசன் அருகில் தரிசிக்கலாம்)

ஆனால், அந்த மர்மப் புன்னகையின் பின் இருக்கும் ரகசியத்தை, அந்தப் பூ உணரவில்லை. மெல்ல நகர்ந்தது அது. ஈசன் சந்நதி வந்தது. ஈசனைக் கண்டவுடன் அந்தப் பூவுக்கு தான் செய்த குற்றம் எல்லாம் நினைவுக்கு வந்து விட்டது. கை நழுவிய பொருள்போல தரையில் சரிந்தது, அந்த வாச மலர். அந்த வாச மலரின் எதிரில், என்னப்பன் வாசீஸ்வரனின் அற்புதத் தோற்றம்! விம்மி விம்மி அழுதது அந்த மலர். அதன் மனதில் இருந்த வஞ்சக எண்ணம் உதிர்ந்து விட்டது என்பதை உணர்த்துவது போல, அதன் உள்ளிருந்து மகரந்தத் துளிகள் உதிர்ந்தது. பல நேரம் கேவிய படி இருந்தது அந்த மலர். ஒரு வழியாக தன்னைத் தேற்றிக் கொண்டு, மெல்ல பேச ஆரம்பித்தது அது.

“ அப்பனே! கையிலை மலையானே! எல்லாம் இந்த பிரம்மனால் வந்த வினை! நான் பாட்டுக்கும் சிவனே என்று உன் சிரத்தில் இருந்தேன். இந்த ஆணவம் பிடித்த பிரம்மன், மாலவனை வம்புக்கு இழுத்தான். இது போதாதா? இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்ற போட்டி வந்து விட்டது. ஆதியும் அந்தமும் இல்லாமல் அருட் பெரும் சோதியாய் அவர்களின் நடுவே தோன்றினாய் நீ! ஆணவம் கொண்ட அவர்களோ உன்னை வணங்குவதை விடுத்து, உன் அடி முடியை தேடிப் புறப்பட்டார்கள்! ஆணவம் கொண்ட பிரம்மன் முடியை நோக்கி பறக்க, திருமால் திருவடியை நோக்கிச் சென்றார். வழியில் நான் எதிர் பட்டேன். தங்களது தாழ் சடையில் இருந்து விழுந்துக் கொண்டிருந்த என்னை, அந்த நான்முகன் சாட்சிக்கு அழைத்தான். ஆம், “அவன் தங்களது முடியைக் கண்டு விட்டான்” என்று நான் பொய் சாட்சி சொல்ல வேண்டும் என்று வேண்டினான். நானும் சம்மதித்தேன்.

‘சத்யம் வத! தர்மம் சர!’ (உண்மையை சொல்! தர்மத்தைக் கடைபிடி) என்ற வேதத்தின் கட்டளையை மறந்தேன். அந்தப் பாவிக்காக தாழம்பூவாகிய நான் தாழ்ந்து போய், பொய் சொன்னேன். விளைவு,  அவனுக்கு கோயில் இல்லாமல் போனது! எனக்கு தங்களது பூஜையில் இடம் இல்லாமல் போனது!. உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் என்பதுபோல தான் கெட்டதொடு நில்லாமல் என்னையும் சேர்த்துக் கெடுத்து விட்டான் அந்த பிரமன்.” தன் வாழ்வின் கசப்பான கடந்த காலத்தை, விவரித்தது அந்த பூ. ஈசன் தாழ் சடையில் இருந்த பூ! வாசம் வீசும் தாழம்பூ! பொய் சொல்லித் தரம் தாழ்ந்த பூ! மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க அழுதது.

‘‘தவறு செய்த என்னை தயை கூர்ந்து மன்னித்தால் ஆகாதோ சுவாமி?” அழுகையின் ஊடே ஒலித்தது அந்த தாழம்பூவின் அபயக் குரல். அதன் முன்னே கல்லாக சமைத்துவிட்ட வாசீஸ்வரர்!மத்ஸயாவதாரம் எடுத்து மதுகைடபர்களைக் கொன்ற, பாவம் போக திருமால் பூஜித்த வாஸ்ஷ்வரர்! சிவ பக்தனான சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்தான், குறும்பன் என்ற காளி உபாசகன். அந்தக் குறும்பன் சரியாக வரி கட்டாததால், சோழன் அவனை எதிர்த்துப் போர் தொடுத்தான். குறும்பன் சோழன் மீது, தான் வணங்கும் காளியை ஏவினான்.

சோழனைக் கொல்ல சீறிப் பாய்ந்து சென்றாள், காளி. விஷயம் அறிந்த சோழன் வாசீஸ்வரரை சரண் புகுந்தான். அவர் தனது வாகனமான நந்தியை அனுப்பினார். நந்திதேவர் காளியை அடக்கி அவளது காலை, சங்கிலியால் பிணைத்து கோயிலுக்கு அழைத்து வந்தார். இந்தச் சம்பவத்துக்கு அத்தாட்சியாக இன்றும் இந்தக் கோயிலில் காலில் சங்கிலியோடு காளி இருக்கிறாள். இப்படி நந்தியை அனுப்பி சோழனை காத்த அதே வாசீஸ்வரர், இன்று தாழம்பூ அழ பார்த்துக் கொண்டே இருந்தார்!

மாடு ஒன்று , எப்போதும் ஒரு மடுவில், பாலை, தானே கறந்து வருவதை அதன் உரிமையாளன், கண்ணுற்றான். அந்த மடுவில் என்னதான் இருக்கிறது? என்று அறிய அந்த மாட்டுக்காரன் வாசி என்னும் கருவியை வைத்து தோண்ட, வெளிப்பட்ட அதே வாசீஸ்வரர். (இன்றும் வாசி என்னும் கருவியால் ஏற்பட்ட வடுவை சுவாமியின் மீது பார்க்கலாம்) இன்று, அந்த தாழம்பூ அழப் பார்த்துக் கொண்டிருந்தார்! இதே வாசீஸ்வரரை, பூஜிக்கும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனைக் கொல்ல அவனது எதிரிகள் சூழ்ச்சி செய்தார்கள். ‘அன்புப் பரிசு “, என்று சொல்லி அவனிடம் ஒரு குடத்தை கொடுத்தார்கள். உண்மையில் அதில் இருந்தது ஒரு விஷமுள்ள நாகம்.

 விஷயம் அறித்த பரம்பொருள் சும்மா இருப்பானா? ஒரு பாம்பாட்டியின் உருவில் வந்து அந்த மன்னனைக் காத்தார். பாம்பாட்டியாக வந்தது ஈசன் தான் என்ற சங்கதியை அறிந்தான் மன்னன். உடன் மூங்கில் காடாக இருந்த இறைவனின் கோயிலை பொற்கோவிலாக நிர்மாணித்தான்.  அன்று பாம்பாட்டியாக வந்த பரமன், இன்று தாழம்பூவை அழ விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். என்ன காரணமாக இருக்கும்?

‘சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்ம’ என்று சொல்லும் வேதம். அதாவது ஆதியிந்தம் இல்லாதது பரம்பொருள் என்பது இந்த வாக்கியத்தின் பொருள். இந்த தாழம்பூ பொய் மட்டுமா சொல்லி விட்டது? இந்த வேத வசனத்தையும் அல்லவா மறுத்துரைத்து விட்டது? வேதத்தை மறுத்தது மாபெரும் அபசாரம் அல்லவா! அந்தப் பாவம் தீர வேண்டாமா? அதை அந்தத் தாழம்பூ அழுது அழுது கரைக்க வேண்டாமா? அந்த தாழம்பூவின் பாவம் கரையக் காத்துக் கொண்டிருந்தது, அந்த கருணைக் கடல். அது முற்றிலுமாக கரைந்து மறைந்து போனதும் நொடிகூட தாமதிக்க வில்லை. உடன் விடையேறி வந்து விட்டான். அவனது அற்புதக் காட்சியைக் கண்டு தாழம்பூ திக்கு முக்காடிப் போனது. அது ஆனந்தப்படுவதைக் கண்ட ஈசன் மெல்ல வாய் மலர்ந்தான்.

‘‘குழந்தாய் வருத்தம்  வேண்டாம்! சிவ பூஜையில் உனக்கு விதிக்கப் பட்ட தடை,  இந்த வாசீஸ்வரர் கோயிலில் செல்லாது! சிவராத்திரி அன்று, உன்னை என் முடி மேல் வைத்து அலங்கரிப்பார்கள்.’’ தேனாக மொழிந்தார் தீன தயாளன். கேட்ட தாழம்பூவுக்கு,  மகிழ்ச்சியில் பேச வார்த்தையே வரவில்லை. இந்த சரிதத்தை படிக்கும் நமக்குக் கூட வார்த்தை வராத போது தாழம்பூவைப் பற்றி கேட்கவா வேண்டும்? கண்ணாற சிவ ராத்திரி அன்று தாழம்பூவின் பூஜை ஏற்கும் அந்தப் பரம்பொருளை, தரிசிக்க உள்ளம் ஏங்குகிறது இல்லையா? (திருப்பாச்சூர் சம்பந்தரால் பாடப் பட்ட தலம் - திருவள்ளூர் மாவட்டம் - வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் இருக்கிறது)

Tags : Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு