×

தீவினை ஒரு தீராப் பிணி

குறளின் குரல்  109

தீயவற்றைச் செய்ய அஞ்சவேண்டும் என்றும் அப்படித் தீயவை தொடர்பான அச்சத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றும் அறை கூவுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகவே `தீவினை அச்சம்` என்ற ஒரு தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார்.

“தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.” (குறள் எண் 201)

தீவினை செய்வதற்குக் காரணமான அகந்தையை உடையவர், தீத்தொழில் செய்ய அஞ்சமாட்டார்கள். ஆனால் உயர்ந்த உள்ளம் கொண்ட மேலோர் தீவினை செய்யக் கட்டாயம் அஞ்சுவர்.

`தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.` (குறள் எண் 202)

தீய செயல்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் ஒருங்கே தீமையைச் செய்வதால், அத்தகைய தீய செயல்களைச் செய்வதற்கு நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் கூடுதலாக நாம் அச்சப்பட வேண்டும்.

`அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.’ (குறள் எண் 203)

தமக்குக் கெடுதலைச் செய்தவர்களுக்கும் தாம் பதிலுக்குக் கெடுதலைச் செய்யாது மன்னித்து விடுவதை அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசுநாதர் சொன்னதும் இதைத்தான். தீயவற்றிற்குப் பதிலாகத் தீயவற்றைச் செய்தால் அத்தகைய செயல் களுக்கு ஒரு முடிவே இல்லை.

`மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.’ (குறள் எண் 204)

பிறருக்குக் கேடு செய்வதனைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும்.

`இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.’  (குறள் எண் 205)

இவன் எந்தத் துணையும் இல்லாதவன் என்று எண்ணி ஒருவனுக்குத் தீமை செய்யக் கூடாது. அப்படித் தீமை செய்தால் தீமை செய்தவனே துணையேதும் இல்லாதவன் ஆவான்.

`தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்.’ (குறள் எண் 206)

துன்பம் தரக்கூடிய தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒருபோதும் செய்யாதிருப்பானாக.

 `எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.’ (குறள் எண் 207)

எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர். தீவினையாகிய பகையோ ஒருவனை எப்போதும் விடாமல் பின்பற்றிச் சென்று அவனுக்குத் துன்பத்தைச் செய்யும்.

`தீவினை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந்து அற்று.’ (குறள் எண் 208)

 தீய செயல்களைச் செய்தவர் கெடுவது உறுதி. நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றது அது.

`தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க அடிஉறைந்து அற்று.’ (குறள் எண் 209)

 ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவன் என்றால், அவன் எத்தகையதொரு தீய செயலிலும் ஒருபோதும் ஈடுபடாமல் இருப்பானாக.

`அருங்கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்.’ (குறள் எண் 210)

ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால் அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.....

மகாத்மா காந்தி எடுத்துக்காட்டாய்க் காட்டிய மூன்று குரங்கு பொம்மைகள் உலகப் புகழ் பெற்றவை. ஒரு குரங்கு விழிகளையும் மற்றொரு குரங்கு வாயையும் மூன்றாவது குரங்குகாதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த பொம்மைகள் அவை. அந்த பொம்மைகள் அறிவுறுத்தும் கருத்து இதுதான்:

 `தீயவற்றைப் பார்க்காதே! தீயவற்றைப் பேசாதே! தீயவற்றைக் கேட்காதே!  தீயவற்றிலிருந்து நாம் விலகியிருந்தாலே போதும். நல்லவைகள் தானாய் நம்மை வந்தடையும் என்பதுதான் காந்தியடிகள் தெரிவிக்க விரும்பிய சித்தாந்தம். திருக்குறளின் தீவினையச்சம் என்ற அதிகாரத்தின் விளக்கமே அந்தப் பொம்மைகள். மகாத்மா காந்தி நண்பன் ஒருவனின் தூண்டுதலால் ஒரு பரத்தை வீட்டுக்குச் சென்றதையும் பின் அச்சத்தோடு அங்கிருந்து திரும்ப ஓடி வந்து விட்டதையும் தமது வாழ்க்கை வரலாறான `சத்திய  சோதனை` நூலில் குறிப்பிடுகிறார். இதைக் கூட வெளிப்படையாக எழுதியதால் தானே ரவீந்திரநாத் தாகூர் அவருக்குக் கொடுத்த மகாத்மா பட்டம் பொருத்தமுள்ளதாக ஆகிறது! தீவினையில் உள்ள அச்சத்தின்  காரணமாகத் தாம் திரும்பி வந்துவிட்டாலும் அத்தகைய எண்ணம் தோன்றியதே பாவம்தான் என்பதையும் மகாத்மா ஒப்புக் கொள்கிறார்.

எண்ணத்தில் கூடப் பாவத்தின் சுவடு படாமல் வாழக் கற்க வேண்டும். வள்ளுவர் சொல்லும் தீவினை அச்சம் என்பது எண்ணம் சார்ந்ததுதான். `எண்ணம் என்பது குழந்தை. செயல் என்பது வளர்ந்த மனிதன். ஒரு குழந்தை பிறந்தால் அது வளர்ந்து பெரியவனாவது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி ஓர் எண்ணம் தோன்றினால் அது வளர்ந்து செயலாக மாறுவதும்’ என்கிறார் `வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி’ என்ற புத்தகத்தில் சுவாமி சிவானந்தர். தன் மனத்தில் தோன்றும் எண்ணத்தைக் கண்காணிப்பதன் மூலமாக மட்டும்தான் மனிதன் வாழ்வில் மேம்பட்ட நிலையையும் நிம்மதியையும் அடைய முடியும்.

 அதனால் தான் செயலைக் கண்காணிப்பதற்கும் முன்பாக அதற்கு வித்தாக அமையும் எண்ணத்தைக் கண்காணிக்கச் சொல்கிறார்கள். எனவேதான் மகாத்மா கெட்ட எண்ணத்தையே பாவம் என ஒப்புக் கொள்கிறார். எண்ணமே மனிதனை உருவாக்குகிறது என்கிற தத்துவத்தைப் பிரகடனப் படுத்திய ஜேம்ஸ் ஆலன் சொல்வதும் தீவினை அச்சம் இருக்க வேண்டும் என்கிற கருத்தோட்டத்தைத் தான். தீவினை அச்சம் இருந்துவிட்டால் நன்மை தானாய்ப் பிறக்கும். வாழ்வில் எல்லா மங்கலங்களும் தானாய் வந்து சேரும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ....

 `கெடுவான் கேடு நினைப்பான்’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பிறருக்குக் கேடு நினைப்பவன் தனக்கே கேடு வருவித்துக் கொள்கிறான். எனவே அடுத்தவர்க்குக் கெட்டது செய்யக் கருதாதே என்கிறது அந்தப் பழமொழி. நம் மனத்தை எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும். பிறருக்குத் தீமை செய்யும் நினைப்பு அணுவளவும் நம் மனத்தில் புக நாம் இடம்கொடுக்கலாகாது. மனம் ஒரு குரங்கு. மனத்தைக் குரங்கைப் பழக்குவதுபோல் விரும்பியவாறு பழக்க முடியும்.

அடுத்தவர்களுக்குக் கெடுதல் நினைக்காத வகையில் மனதைப் பழக்கப் பழக்க நம் வாழ்வில் ஓர் ஆச்சரியம் நிகழ்வதை நாம் பார்ப்போம். நமக்கு அடுத்தவர்களால் அடுத்தடுத்து நல்லது நடக்கத் தொடங்கும். வள்ளுவம் காட்டும் நெறி சாதாரணமானதல்ல. அது அற்புதமான ஓர் உளவியல் விஞ்ஞானம்.  பெளதிகத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி என்றொரு விதி உண்டு. `ஃபார் எவ்ரி ஆக்‌ஷன் தேர் ஈஸ் ஆன் ஈக்வல் அண்ட் ஆப்போசிட் ரியாக்‌ஷன்’ என்கிறது அந்த விதி. (For every action there is an equal and opposite reaction) அதாவது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அதற்குச் சமமான எதிர்ச் செயல்பாடு உண்டு என விளக்குகிறது அது. நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த விதி அது.

யோசித்துப் பார்த்தால் இது பெளதிகம் சார்ந்த விஞ்ஞான விதி மட்டுமல்ல. இது நம் அனைவரது வாழ்விலும் ஊடுருவியிருக்கும் நமது வாழ்வியல் சார்ந்த விதியும் கூட. நாம் எதைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்ப வருகிறது. நாம் கெட்டதைச் செய்தால் கெட்டது வரும். நல்லதைச்  செய்தால் நல்லது வரும்.  நம் செயல்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்தைப் போன்றவை. அவை நம்மை நோக்கிய திரும்பி வரும். நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் ஒருபோதும்
தப்பவே இயலாது.

 `வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்!’ என்று பெரியவர்கள் சொல்வது இந்த விதியைப் பற்றியதுதான். ஆனால் இந்த விதி உடனே செயல்படுவதில்லை. இன்று பிறர்க்குக் கெடுதலைச் செய்து வாழ்வதில் ஒருவர் ஆனந்தம் காணலாம். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அத்தகைய கெடுதல் அதைச் செய்தவருக்கே திரும்ப வந்துசேரும் என்பது உறுதி.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதைத்தான்.  கெடுதல் செய்தவர்களுக்குக் கெடுதலே வரும் என்பது சட்ட நியதி அல்ல. அது தெய்வ நியதி. சட்டம் உடனே செயல்பட்டுத் தண்டனை கொடுக்கும். அது அரசின் பொறுப்பு. தெய்வம் உடனே தண்டிப்பதில்லை. ஆனால் காலப்போக்கில் கெடுதல் செய்தவன் தெய்வம் தரும் தண்டனையிலிருந்து கண்டிப்பாய்த் தப்பவே முடியாது. `அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்’ என்று சொன்னது இந்தக் கண்ணோட்டத்தில் தான்.

 இன்றைய சூழலில் சட்டம் சார்ந்த தண்டனைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமான வழக்கறிஞரை வைத்துத் தப்பித்து விட முடியலாம். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு துலாக்கோல் போன்றது. அதன் சரியான தீர்ப்பிலிருந்தும் அது வழங்கும் தண்டனையிலிருந்தும் யாரும் தப்ப இயலாது. தெய்வங்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சலுகை காட்டுவதில்லை!  நாம் எந்த வகையான வினையைச் செய்தாலும் உண்மையில் அந்த வினையை விதையாக விதைக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, நாம் எதை விதைத்தோமோ அதைத்தான் நாம் அறுவடை செய்யமுடியும். விரையொன்று போடச் சுரையொன்று முளைக்காது. எனவே தீவினை செய்வதில் அச்சத்தோடு இருந்து விலகிவிட்டால், எதிர்காலத்தில் தீயவை நமக்கு ஒருபோதும் வரவே வராது. ....

தீவினை அச்சம் என்பதை எல்லாக் கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவதிலும் இருக்க வேண்டிய அச்ச உணர்வைக் குறித்ததாகவும் கொள்ளலாம். புகையிலையை அதிகம் பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று இன்று மருத்துவ விஞ்ஞானம் அறைகூவி எச்சரிக்கிறது. எனவே புகையிலை குறித்த அச்ச உணர்வோடு அதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.   மது அருந்தினால் அந்தப் பழக்கம் எதிர்காலத்தில் நம் உடல் நலத்தை பாதிக்கும் என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். எனவே மதுப்பழக்கம் ஏற்படாமல் அச்சத்தோடு மதுவிலிருந்து விலகி வாழக் கற்க வேண்டும்.

 ஒன்றைப் பழகுவது எளிது. பழகியபின் அதிலிருந்து விடுபடுவது கடினம். எனவேதான் தீவினையில் அச்சத்தோடு இருக்க வேண்டும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார். `எதையும் ஒருமுறை செய்து பார்ப்போம்’ என்பது வீரமல்ல. எதையும் ஒருமுறை கூடச் செய்யாமல் இருப்பதே வீரம். தீயவற்றில் அச்சம் கொள்ளாது ஒருமுறை செய்துபார்ப்போம் என அந்தப் பழக்கத்தில் ஈடுபட்டவர்கள் முற்றிலுமாக அந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டு அழிந்து போவதைப் பார்க்கிறோம்.`குடியால் குடை சாய்ந்த கோபுரங்கள்` என்றொரு நூலை எழுதினார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன். அந்த நூலில் பிரபலமானவர்கள் பலர் எப்படிக் குடிப்பழக்கத்தால் கெட்டு அழிந்தார்கள் என்கிற வரலாற்றை விரிவாக எழுதினார். அந்த நூலின் முன்னுரையில் தானும் அந்தப் பழக்கத்தால் அழிந்தவன் தான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆட்படாமல் இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மூதுரையில் அவ்வைப் பாட்டி தீயவற்றிலிருந்து எவ்விதமெல்லாம் விலகியிருக்க வேண்டும் என்று அழகாக அறிவுறுத்துகிறார்:

`தீயாரைக் காண்பதுவும் தீதே! திருஅற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே! - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது!’

தீவினை அச்சம் என்பது தீயவற்றின்பால் கொண்ட அச்சம் மட்டுமல்ல, தீயவர்களிடம் முற்றிலுமாக விலகியிருப்பதும் கூட அதில் அடங்கும். தீயவர்களின் கூட்டுறவே தீவினையை ஏற்படுத்துகிறது. மது அருந்தும் பழக்கமுள்ளவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருந்தால் தான் மதுப் பழக்கத்திலிலிருந்து ஒருவன் விடுபட முடியும். `தீய நண்பர்களோடு நட்புறவு வைத்துக் கொள்வேன், ஆனால் தீயவற்றில் ஈடுபடாமல் இருப்பேன்’ என நினைப்பது நடைமுறை சாத்தியமல்ல. அத்தகைய போக்கு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான்.

 இன்றைய இளைஞர்கள் வள்ளுவரின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களையும் படித்துப் பின்பற்றலாம். என்றாலும் அவர்கள் தொடக்கத்தில் இந்தத் தீவினை அச்சம் என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் பயின்று அவை சொல்லும் கருத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், அவர்கள் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் அடைய முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் வள்ளுவர் வாக்கு என்றும் பொய்க்காத சத்திய வாக்கு.
(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED குடோனில் திடீர் தீ விபத்து