×

புனித பெருநாள் தொழுகை

நான்காவது கட்டமாக தேசிய அளவில்  பொதுமுடக்கம்(லாக் டவுன்) அறிவிக்கப்பட்டிருப்பதால் மே 31 வரை வழிபாட்டுத் தலங்கள் மூடியே இருக்கும். இந்தச் சூழலில் பெருநாள் தொழுகையை நாம் நம் வீட்டிலேயே நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வழிமுறைகள் என்ன?
இது குறித்து மார்க்க அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் அறிஞருமான நூஹ் மஹ்ழரி அவர்கள் குறிப்பிட்டதாவது:“எதிர்பாராத விதமாக தவறி விடுகின்ற பெருநாள் தொழுகையை தனிப்பட்ட முறையில் எவ்வாறு தொழ வேண்டும் என்கிற  வழிகாட்டுதலைப் பின்புலமாக வைத்துக்கொண்டு நெருக்கடியான நிலைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆகவே, யாருக்கு பெருநாள்தொழுகையைக் கூட்டுமுறையில் (இமாம் ஜமாஅத்துடன்) தொழ முடியாமல் போய் விடுகிறதோ அவர், அதே முறையில் (அதாவது, ஒவ்வொரு ரக்அத்திலும் அதிகப்படியான தக்பீர்களுடன்) தனியாக அதனை நிறைவேற்றலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய  விஷயம் : குத்பா (பேருரை) என்பது கூட்டுமுறையிலான ஜும்ஆ(வெள்ளிக்கிழமை)  தொழுகைக்கு உரியதாகும். பெருநாள் தொழுகையை ஜும்ஆ தொழுகையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஜும்ஆ தொழுகை தவறிவிட்டால் அதற்குப் பகரமாக நான்கு ரக்அத்கள் நண்பகல் ( லுஹர்) தொழ வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகை அதுபோன்றதல்ல.எனவே, தனியாக அல்லது சிறு குழுவாக பெருநாள் தொழுகையை  நிறைவேற்றுகின்றபோது பேருரை (குத்பா) நிகழ்த்த வேண்டியதில்லை. மேற்கோள்கள் :இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தமது நூலில், இது குறித்து “யாருக்குப் பெருநாள் தொழுகை தவறி விட்டதோ அவர் 2 ரக்அத்கள் தொழுது கொள்ள வேண்டும்” என்ற தலைப்பில் தனிப்பாடமே பதிவு செய்துள்ளார்கள்.

அதில், (நகர்ப்புறங்களில் நடைபெறும் பெருநாள் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ள முடியாத) பெண்களும் கிராமங்களில் வசிப்பவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும், காரணம், “இது முஸ்லிம்களாகிய நம்முடைய பெருநாள் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள்.அனஸ் (ரலி) அவர்கள், தம்முடைய குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் ஒன்றுகூட்டி நகரங்களில் தொழவைப்பது போன்று தக்பீர் கூறி பெருநாள் தொழுகையைத் தொழ வைத்துள்ளார். (ஃபத்ஹுல்பாரி)நபி (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்களுக்கு பெருநாள் தொழுகை தவறிய போது, தமது குடும்பத்தினரை ஒன்று கூட்டி, ஜமாஅத்துடன் இமாம் தொழ வைப்பது போன்று தொழவைத்தார். (பைஹகி)இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) கூறுவதாவது, “ஒருவருக்கு பெருநாள் தொழுகைத் தவறிவிட்டால் அவர், இமாம் தொழ வைப்பது போன்று தனியாகத் தொழுது கொள்ளட்டும்”. (இப்னு அபீஷைபா)ஆகவே இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பெருநாள் தொழுகையை அவரவர் வீடுகளில் தொழுவோம். இந்த நன்னாளில்  கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றும்படி இறைவனிடம் இரு கையேந்தி இறைஞ்சுவோம்.

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!