×

மறுமை நம்பிக்கையின் பயன்கள்

வாழ்வு எப்படி உண்மையோ அப்படியே மரணமும் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. அதே போல் இந்த உலகம் இயங்குவது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை, இந்த உலக வாழ்வுக்குப் பிறகு மறுமை உண்டு என்பதும். மறுமை நம்பிக்கையால் ஏற்படும் பயன்கள் என்ன? ஒருவர் மறுமைக் கொள்கை மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால் அவருடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.

1. பொறுப்புணர்வு

ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு ஏற்கும். தன் செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் நம்பிக்கை மனித வாழ்வை நெறிப்படுத்தத் துணை செய்கிறது.

2.பொறுமை

மறுமை நம்பிக்கை கொண்ட ஒருவர் உலகில் ஏற்படுகின்ற அனைத்துச் சிரமங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

3.மனநிறைவு


மறுமை நம்பிக்கை மனிதனின் தன்னலப் போக்கை நீக்குகின்றது. இருப்பதைக் கொண்டு திருப்திப்படும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்டவர்கள் தம்மிடம் இருப்பதையும் பிறருக்கு வழங்கிடத் தயாராக இருப்பார்கள்.

4. நேர்மை நற்பண்பு

மறுமை நம்பிக்கை கொண்ட ஒருவர் மறு உலகில் நடைபெறும் நீதிவிசாரணைக்கு அஞ்சி, நரக வேதனைக்குப் பயந்து, தாம் இறைநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவோம் எனும் உணர்வினால் உலகச் செயற்பாடுகள் அனைத்தையும் நேர்மையாக நிறைவேற்றுவார். நன்னடத்தையை மட்டுமே மேற்கொள்வார்.

5. இறையச்சம்(தக்வா)

தக்வா இறையச்சம் அதிகமாகும். நன்மைகளைச் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் தீமைகள் குறித்தான வெறுப்பும்தான் தக்வா என்பதன் பொருள். மறுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நன்மைகளில் நிலைத்திருப்பார்கள், தீமைகளை வெறுப்பார்கள்.

6. உளத்தூய்மை

மறுமையில் புண்ணியம் கிடைக்க வேண்டுமெனில் உலகில் செய்யப்படும் நற்செயல்கள் “இறைவனுக்காக” எனும் உணர்வோடு செய்யப்படவேண்டும். புகழ், பகட்டு, விளம்பர நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மறுமையில் நன்மை கிடைக்காது. எனவே மனிதனின் உளத்தூய்மையை மறுமை நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு மறுமை நம்பிக்கையினால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். மறுமையை முன்வைத்தே உலகில் வாழ்ந்து மகத்தான இறைவனின் அருளைப் பெறுவோம்.

இந்த வார சிந்தனை

“(மறுமை எதற்காக எனில்) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோர்க்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக.” (குர்ஆன் 10:4)

சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்