×

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. தினமும் நாகராஜா கோயில் திடலில் சமய சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான நேற்று (21ம்தேதி) காலை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கருப்பையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், குமரி மாவட்ட பால்வள தலைவர் அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில்கள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர்கள் ரமேஷ்குமார், சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், அனந்தகிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து, தேர் மதியம் 1.20 மணிக்கு நிலைக்கு வந்தது.

ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏ.எஸ்.பி. ஜவகர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. காலையில் இருந்து அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் தீபாராதனை நடைபெற்றது.  இரவில் சப்தாவர்ணம் நடந்தது. இன்று (22ம் தேதி) 10ம் திருவிழா நடைபெறுகிறது. ஆயில்ய பூஜையும் நடக்கிறது. இரவு 9.30க்கு ஆறாட்டு துறையில் இருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றுடன் 10 நாள் நடந்த திருவிழா நிறைவடைகிறது.

Tags : festival ,Nagaraja Temple ,Nagercoil ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...