திருச்சானூர் கோயிலில் 2வது நாள் பிரமோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரமோற்சவத்தின் 2வது நாளில் பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டம், திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரண்டாவது நாளான நேற்று காலை வைகுண்டத்தில் ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது உள்ள மகாவிஷ்ணுவுடன் இருக்கும் மகாலட்சுமி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோயில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடிய படி பங்கேற்றனர்.மேலும், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் பக்தர்களின் கோலாட்டம், பஜனை, தப்பாட்டம், கேரள செண்டை மேளம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

மேலும் சுவாமியின் அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான வேடமணிந்து பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ண முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் அனைவருக்கும் கல்வி ஞானம் அருளும் தாயாக பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 3வது நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்திலும் இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

× RELATED தீயணைப்புத்துறை சார்பில் சமயபுரம் கோயிலில் தீத்தடுப்பு செயல்விளக்கம்