இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 12
அடுக்கடுக்காகக் கேள்விகளை ஆர்வமுடன் கேட்கும் இயல்பு வளரும் இளமைப்பருவத்தினர்க்கே உரியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்றும் அகலாத இளமை கொண்ட முருகப்பெருமான் செந்தமிழ் மூதாட்டி ஒளவையைப் பார்த்து ‘அரியது எது? பெரியது எது? கொடியது எது? இனியது எது?’ என்று வினாக்களை விடுக்க ஒளவையிடமிருந்து அருந்தமிழ் அருவியாக பதில்கள் அனைத்தும் பாட்டாகவே வெளிவந்தது. குழவியும், கிழவியும் நிகழ்த்திய அந்த வினா விடை அரங்கம் தமிழ் இலக்கியவாணர்கள் அனைவர் நெஞ்சையும் கவர்ந்த அரிய கருத்துப்
பெட்டகம் ஆகும்.
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
இனிது இனிது ஏகாந்தம் இனிது
கொடிது கொடிது வறுமை கொடிது
பெரிது பெரிது புவனம் பெரிது
என்று விடை தரும் தமிழ்க்கிழவி குழந்தைகளின் மனோபாவம் அறிந்து பக்குவமாக பதில் அளிக்கின்றாள். ‘பெரியது எது?’ என்று நம்மிடம் குழந்தை ஒன்று கேட்டால் பொருள் ஒன்றை எடுத்துக்காட்டி இது பெரியது, இதை விட இது பெரியது என்று இன்னொன்றைக் காட்டி, இவ்விரண்டையும் விட அதோ இருக்கிறதே அது பெரியது என்று குழந்தைகளின் ஆர்வத்தை மேலிடச் செய்யும் வண்ணம் பதிலளிக்க வேண்டும். மேற்கண்ட விதத்தில்தான் பதில் தருகின்றாள் பைந்தமிழ்ப் பாட்டி.‘எது மிகவும் பெரியது? என்று கேட்கும் வேலனுக்கு ஒளவை இவ்வாறு பதில் தருகின்றாள்.
‘பெரியது கேட்கின் எரிதவழ்--- வேலோய். பெரிது! பெரிது! புவனம் பெரிது!’ ஆனால், இந்த பூமிதான் மிகவும் பெரியது என்று எண்ணி விட முடியுமா? இந்த விரிந்த வையத்தைப் படைத்த படைப்புக் கடவுளுளான பிரம்மதேவன் பெரியவன். பிரம்மன் பெரியவன் தான். ஆனால் அவனைத் தோற்றுவித்தவர் திருமால். மேலான அந்த பெருமாள் படுத்திருக்க இடம் தருவதுவோ பரந்த கடல். ஆக கடல்தான் பெரியது என்று எண்ணி விடாதே முருகா. அந்தக் கடலை அகத்தியர் தான் கமண்டலத்துள் அடக்கி விட்டார். இவ்வாறு ஆவல் மேலோங்க ஆறுமுகக் குழந்தைக்கு அறிவுத்திறத்தோடு பதில் அளிக்கும் ஒளவையாரின் பாடல் செந்தமிழ் அமுதமாகத் தித்திக்கின்றது. பாடல்
முழுவதையும் பார்ப்போமா?
பெரிது! பெரிது! புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் வந்தியில் வந்தோன்!
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்!
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்!
காசமோ புவியிற் சிறு மான்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஆண்டவனை விட அடியவர்களே மேலானவர்களாகப் போற்றப்படுகின்றனர். அறுபத்துமூன்று அடியவர்களின் வரலாற்றைக் கூறும் சேக்கிழாரின் காவியம் ‘பெரிய புராணம்’ என்று பெயர் பெற்று பொலிகின்றது. ஆண்டவனுக்குச் செய்வது ஆராதனை. அடியவர்களைச் சிறப்பிப்பது சமாராதனை. தெய்வத்தை வழிபடுவது மகேசுவர பூஜை. தொண்டர்களைப் பணிவது மாகேசுவர பூஜை. அடியவர்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனைச் சென்று அடையும்.
ஆண்டவனுக்கு நேரிடையாகச் செலுத்தும் வழிபாடுகள் அடியவர்களை அணுகாது. மேற்கண்ட சிறப்புகள் அனைத்தும் ஒருங்கே படிப்பவர்கள் உணரும்வண்ணம் பெரியவற்றைப் படிப்படியாக அடுக்கி முடிமணியாக, சிகரமாக ‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!’ என்று பாடுகிறாள் செந்தமிழ் மூதாட்டி. தொண்டர்கள் பெரியவர்கள் மட்டும் அல்ல. இறைவனை விடவும் சாமர்த்தியசாலிகள் என்கிறார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் ஜோதியன்...
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
அவர் தலைவர்...
என்றும் சேக்கிழாரும், கம்பரும் பாடியிருக்கும்போது மணிவாசகர் மட்டும் அதற்கு மாற்றாக பக்தர்கள் பகவானை விட பன்மடங்கு ஆற்றலாளர்கள் என்று எப்படிக் கூறுகிறார் என வியப்பு மேலிடுகிறது அல்லவா! கவித்துவ நோக்கில் நயம்பட அவர் கூறும் காரணத்தை அறிந்து கொண்டால், ஆமாம்! ஆமாம்! சரியாகத்தான் சொல்லியுள்ளார் மாணிக்கவாசகர். பக்தர்களாகிய நம்முடைய சாமர்த்தியத்தை நாமே அறியாமல் இருக்கின்றோமே என்று ஆச்சர்யப்படுவோம். பக்தர் கூறுகின்றார்; சிவபெருமானே! தாங்கள் முற்றறிவும், பேரானந்தமும், அளப்பரிய ஆற்றலும் வாய்ந்தவர்.
ஆன்மாவாகிய நானோ சிற்றறிவும், கவலையும், ஓரளவும் ஆற்றலுமே பெற்றவன். இவ்வாறு இருக்க தாங்கள் என் பக்திக்கு இறங்கி, தங்கள் நிலையினின்றும் இறங்கி என்னோடு இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்து விட்டீர்கள். ஞானமே வடிவாகிய தாங்கள் இந்த ஒரு விஷயத்தில் ஏமாந்து விட்டீர்கள். விலையில்லாத மாணிக்கக் கட்டியைக் கொடுத்து விட்டு அதற்கு ஈடாக, பண்டமாற்று முறையில் மண்ணாங்கட்டியை அல்லவா பெற்றுள்ளீர்கள்? ஆமாம்! அழியும் ஜீவனாகிய என்னைப் பெற்று நித்திய வடிவினராகிய நீங்கள் என்னுள் இரண்டறக் கலந்து விட்டீர்களே!
‘தந்தது உன் தன்னை!
கொண்டது என் தன்னை!
சங்கரா ஆர்கொலோ சதுரர்?’
எம்பெருமானே! உன்னை நான் பெற்றதனால் பேரானந்த பெருவாழ்வு பெற்றேன். ஆனால் ஆண்டவரே! அடியவனாகிய என்னை தாங்கள் எடுத்துக் கொண்டதால் என்ன பலன் பெற்றீர்கள்? நானே சாமர்த்தியசாலி! தாங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள்.
‘அந்தம் ஒன்றில்லா
ஆனந்தம் பெற்றேன்!
யாது நீ பெற்றது என்பால்?’
திருப்பெருந்துறை இறைவனிடம், ‘நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து’ பாடுகின்றார் மாணிக்கவாசகர். ‘என்னையும் ஒரு பொருளாகக் கருதி, சிறியவனாகிய என் சிந்தையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! என் ஜீவனை சிவ சொரூபமாகச் சுடர் விடச் செய்து விட்டீர்கள். எளியவனாகிய நான் இதற்கு பிரதிபலனாக செய்யக்கூடிய கைம்மாறு ஏதும் இல்லையே! எட்டாம் திருமுறையான திருவாசகத்தில் கோயில் திருப்பதிகம் பகுதியில் அடங்கியுள்ளது இப்பாடல்.‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற புகழ் மொழிக்குக் கட்டியம் கூறுகின்றது இப்பாடல். அதே சமயம் ‘சில்வாழ்நாள், பல்பிணி, சிற்றறிவு உடைய மானிடனின் அறிவுத்திறத்தையும் பறை சாற்றுகின்றது.
தந்தது உன்தன்னை! கொண்டது என்தன்னை!
சங்கரா! ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்!
யாது நீ பெற்றது என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே ஈசா! உடல் இடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைமாறே!
