×

மைதான் இந்தி விமர்சனம்

கால்பந்தாட்டத்துக்கும், இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால், 1952 முதல் 1962 வரை கால்பந்தாட்டத்தில் இந்தியா எப்படி இருந்தது தெரியுமா? கண்டிப்பாக அதுபற்றி ரீல்களில் மூழ்கிக்கிடக்கும் 2k கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் இந்திய கால்பந்து அணியின் ‘கோச்’ ஆக இருந்தவர், எஸ்.ஏ.ரஹீம். அவரது தலைமையில் இந்திய அணி எப்படி சாதித்தது என்ற நிஜ சம்பவங்களைத்தான் படமாக உருவாக்கியுள்ளனர்.

1952ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எதிரணி 10 என்றால், இந்திய அணி 1 என்ற ஸ்கோருடன் தோற்று விடுகிறது. இக்களங்கத்தை துடைத்து, இந்திய கால்பந்து அணியை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்வதற்கு எஸ்.ஏ.ரஹீம் போராடுகிறார். புதிதாக ஒரு அணியை உருவாக்கினால்தான் வெற்றி கிடைக்கும் என்று இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து புது அணியை உருவாக்கி, அவர் எப்படி சாதித்தார் என்பதை படம் சொல்கிறது.

எஸ்.ஏ.ரஹீமாக அஜய் தேவ்கன் வாழ்ந்திருக்கிறார். கொஞ்சம் கூட அலட்டல் இல்லாத நடிப்பு. இந்திய அணியை வெளிநாட்டு அணியின் கோச் கேவலப்படுத்தும்போதும், வீரர்களே தன்னை விமர்சிக்கும்போதும் தன்னைப் புரிந்துகொள்ளாத மனைவி யிடமும் அஜய் ேதவ்கன் காட்டுகின்ற மேனரிசங்கள் சாதாரண நடிகர்களால் செய்ய முடியாதவை. மனைவியாக பிரியாமணிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

துஷார்-பியோடரின் ஒளிப்பதிவு, தேவ் ராவ்-ஷானவாஸ் படத்தொகுப்பு படத்தை தாங்கி நிற்கின்ற தூண்கள். ஸ்போர்ட்ஸ் டிராமாவை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது பற்றி அவை பாடம் நடத்தி இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை பலே ரகம். கிளைமாக்சில் நம்மை அழவைத்து, எமோஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் அமித் சர்மா. பாஜ கண்ணசைவால் இஸ்லாமிய வெறுப்புப் படங்களை பாலிவுட் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், எஸ்.ஏ.ரஹீமின் தேசத்துக்கான அர்ப்பணிப்பைச் சொன்ன ‘மைதான்’, முக்கியமான படம்தான்.

The post மைதான் இந்தி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு