×

இயக்குனர் பாலா என்னை முதுகில் தாக்கினார்: பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு பகீர் புகார்

சென்னை: தமிழில் உருவாகும் ‘வணங்கான்’ என்ற படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் பாலா தன்னை அடித்ததால், அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக மலையாள நடிகை மமிதா பைஜு புகார் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள ‘பிரேமலு’ மலையாள பட ஹீரோயின். இது திரையுலக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மமிதா பைஜு அளித்துள்ள பேட்டி வருமாறு: ‘பாலா இயக்கிய ‘வணங்கான்’ படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தபோது, முதலில் நான் ஒப்பந்தமாகி இருந்தேன். படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். இதில் எனக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கேரக்டர் இதைச் செய்வது போல் சித்தரிக்கப்படுகிறது. இதை எப்படிச் செய்வது என்பது குறித்து பாலா, அந்தக்கலையில் தேர்ந்த பெண்ணிடம் செய்து காட்டும்படி சொன்னார். அவர் முடித்த பின்பு பாலா, ‘ஓ.கே. இப்போது நாம் டேக் போகிறோம்’ என்று சொன்னார். நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம், அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதை நான் தெளிவாக கற்றுக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. 3 டேக்குகள் எடுத்தேன்.

அப்போது பாலா என்னை நிறைய திட்டினார். முன்னதாக, ‘நான் அவ்வப்போது திட்டுவேன். அதை எல்லாம் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அவரே சொல்லியிருந்தார். எனினும், அந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா திட்டியது என்னைப் பெரிதும் காயப்படுத்தியது. படப்பிடிப்பில் அதற்காக நான் மனதளவிலேயே தயாராகி வருவேன். பிறகு அவர் என்னை முதுகில் அடித்தார். இது எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே பாலா டைரக்‌ஷனில் சூர்யா நடித்திருப்பதால், பாலா எப்படிப்பட்டவர் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார். நான் புதிதாக இணைந்ததால், எனக்கு பாலா பற்றி தெரியவில்லை. இதுபோன்ற கசப்பான அனுபவங்கள்தான், என்னை ‘வணங்கான்’ படத்தில் இருந்து வெளியேற வைத்தது’ என்றார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பிரேமலு’ படத்தில் நடித்திருப்பவர், மமிதா பைஜு. ‘வணங்கான்’ படத்தில் இருந்து அவர் விலகிய பிறகு சூர்யாவுடன் கிரித்தி ஷெட்டி நடித்தார். இந்நிலையில், பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். பிறகு கிரித்தி ஷெட்டி நீக்கப்பட்டார். தற்போது அருண் விஜய், கன்னட நடிகை ரோஷிணி பிரகாஷ் நடித்து வருகின்றனர்.

The post இயக்குனர் பாலா என்னை முதுகில் தாக்கினார்: பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு பகீர் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bala ,Mamita Baiju Bagheer ,Chennai ,Mamita Baiju ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை