×

பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ்; பாக்ஸ் ஆபீசை கவ்விய மலையாள சினிமா

சென்னை: சமீபத்தில் வெளியான 3 மலையாள படங்கள் இந்திய பாக்ஸ் ஆபீசில் அமர்க்களம் செய்து வருகிறது. யதார்த்தமான சினிமாவுக்கு எப்போதுமே பெயர் போனது மலையாள படங்கள். மலையாள படங்களின் கதைக்களம், கேரக்டர், கதை சொல்லும் விதம் என அனைத்துமே ரசிகர்களை பெரிதும் கவரும் அம்சம் கொண்டவை. குறிப்பாக சமீபகாலமாக இந்த போக்கு அதிகரித்துள்ளது. ‘பிரேமம்’ படம் தொடங்கி, ‘2018’ என்ற பெருமழை வெள்ளம் பற்றிய படம் வரையிலும் மலையாள சினிமா ரசிகர்களை அவ்வப்போது மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான 3 படங்கள் பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கி துவம்சம் செய்துகொண்டிருக்கிறது.

மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள படம் ‘பிரம்மயுகம்’. முழுக்க கறுப்பு வெள்ளையில் உருவான இப்படம், அமானுஷ்ய பின்னணியில் உருவான கதையாகும். ரூ.18 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இதுவரை ரூ.50 கோடி வசூலை குவித்துவிட்டது. இதையடுத்து, வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான படம்தான் ‘பிரேமலு’. நஸ்லென் கஃபூர், மமிதா பைஜு ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படம் இளமை துள்ளும் காமெடி கலந்த காதல் கதையாகும். இப்படமும் ரூ.51 கோடி வசூலை தொட்டுவிட்டது. கிரிஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கியிருக்கும் மலையாள படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சர்வைவல் த்ரில்லர்.

மஞ்சுமெல் எனும் கேரள பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்காக வருகிறது ஒரு குழு. கொடைக்கானலில் குணா குகை (குணா படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம்) மிகவும் பிரபலம். இங்கு தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் செல்லும் அந்த குழுவினரில் ஒருவர் 900 அடி பள்ளத்தில் விழுந்துவிடுகிறார். அவரை மீட்க நடக்கும் போராட்டம்தான் பரபரப்பான திரைக்கதை. இந்த 3 படங்களும் மொழிகளை தாண்டி, ரசிகர்களை தியேட்டரின் பக்கம் இழுத்து வருகிறது. மறுபுறம் தமிழ் சினிமாவோ ஒரேவிதமான ஃபார்முலாவில் சிக்கிக்கொண்டு, இந்த ஆண்டு ஒரு வெற்றிப் படமும் தராமல் தத்தளித்து வருகிறது.

The post பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ்; பாக்ஸ் ஆபீசை கவ்விய மலையாள சினிமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Brahmayukam ,Premalu ,Manjumel ,Kavviya Malayala Cinema ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது பிளாக்பஸ்டர் படமான பிரேமலு!