×

தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்களை சேர்க்க இருப்பது சட்ட விரோதம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது.தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டும். பீகாரில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விசித்திரமாக உள்ளது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே நேரம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஆபத்தானது, சட்டவிரோதமானது.

அவர்களை நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாக உள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்புகின்றன.தேர்தல் ஆணையர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். தேர்தல் ஆணையம் குறித்த விவாதத்தை பாஜ அரசு அனுமதிக்க மறுக்கிறது’’ என்றார்.

 

The post தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்களை சேர்க்க இருப்பது சட்ட விரோதம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Former Union Minister ,P. Chidambaram ,New Delhi ,Bihar ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...