×

தர்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தேன்: எஸ்.ஐ.டியிடம் மற்றொருவர் அளித்த புகாரால் பரபரப்பு

பெங்களூரு: தர்மஸ்தலாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று தோண்டும் பணிகள் நடைபெறவில்லை. 11, 12 ஆகிய இடங்கள் இன்று தோண்டப்படும். இந்நிலையில், ஜெயந்த் என்ற உள்ளூர்வாசி, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததாக எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்துவருகிறது. கடந்த சனிக்கிழமை வரை 10 இடங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த 10 இடங்களில், ஒரேயொரு உடலின் 12 எலும்புகளும், ஒரு மண்டையோடும் மட்டுமே கிடைத்தன. 11, 12, 13 ஆகிய இடங்கள் இன்னும் தோண்டப்பட வேண்டியிருக்கும் நிலையில், நேற்று அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பதால் தோண்டும் பணிகள் நடைபெறவில்லை. இன்று தோண்டும் பணி தொடரும்.

இதற்கிடையே, நேற்று பெல்தங்கடியில் எஸ்.ஐ.டி அதிகாரிகளைச் சந்தித்த உள்ளூர்வாசி ஜெயந்த் என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதைத் தான் பார்த்ததாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் எஸ்.ஐ.டி-யிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ.டி அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம்பெண்ணின் உடல் எந்த சட்ட நடைமுறை, போலீஸ் தலையீடு மற்றும் பிரேத பரிசோதனை எதுவுமே இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. அதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அதுதொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவும் இல்லை. வெளி உலகத்திற்கே தெரியாத வகையில் சத்தமில்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன. அதைத்தான் எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறேன்.

அந்த சம்பவம் பல ஆண்டுகளாக எனக்கு மிகப்பெரிய உறுத்தலாக இருந்துவருகிறது. இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு எஸ்.ஐ.டி அமைத்ததால் எனக்கு நம்பிக்கை வந்தது. இதை இப்போது எஸ்.ஐ.டியிடம் கூறுவது பாதுகாப்பானது என்று உணர்ந்ததால் புகார் அளித்தேன். நான் கண்ட உண்மையைக் கூறினால் என்ன ஆகுமோ என்ற எதிர்வினை குறித்த பயம் எனக்கு இருந்தது. இப்போது சூழல் மாறிவிட்டது. நீதியை நிலைநாட்டும் எஸ்.ஐ.டியின் திறனில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார். மற்றொருவர் அளித்த புகாரால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே புகார் அளித்த ஜெயந்தை இன்றும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எஸ்ஐடி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

The post தர்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தேன்: எஸ்.ஐ.டியிடம் மற்றொருவர் அளித்த புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dharamsala ,SIT ,Bengaluru ,Jayant ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...