
பாட்னா: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. பீகாரில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிந்து கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தனது பெயர் இல்லை என ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று முன் தினம் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அனைவரின் முன்பாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, அதில் ‘எந்த தகவலும் இல்லை’ என வருவதை காட்டினார். ஏற்கனவே சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தேஜஸ்வியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், தேஜஸ்வியின் பெயர் நீக்கப்படவில்லை என்றும் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் வரைவு பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரத்துடன் விளக்கியது. தேஜஸ்வி பழைய அடையாள அட்டை எண்ணை பதிவு செய்திருக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில், தேஜஸ்வி யாதவ் 2 வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பதாக பாஜ நேற்று குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘தேஜஸ்வி யாதவ் கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்த தேர்தல் பிரமாணத்தில் சமர்பித்த வாக்காளர் அடையாள அட்டை எண்ணானது, பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டதாக கூறி வெளியிட்ட வாக்காளர் அட்டை எண்ணுடன் வேறுபட்டது. அப்படியெனில் தேஜஸ்வி யாதவ் 2 வாக்காளர் அட்டைகளை வைத்துள்ளார் என்றுதான் அர்த்தம். இதன் மூலம் காங்கிரஸ், ஆர்ஜேடி முழுமையாக அம்பலப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரான தேஜஸ்வியே 2 வாக்காளர் அட்டை வைத்திருக்கும் போது அவரது கட்சி தொண்டர்கள் எவ்வளவு போலி அட்டைகளை வைத்திருப்பார்கள். அதன் மூலம் ஆர்ஜேடி கட்சிக்கு அவர்கள் எத்தனை போலி வாக்குகள் போட்டியிருப்பார்கள்’’ என்றார்.
பாஜவின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தேஜஸ்வி யாதவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ‘உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 416ல் வாக்குச்சாவடி எண் 204ல் இடம் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையின் எண் ஆர்ஏபி0456228 என்பது முதற்கட்ட சரிபார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் பெயர் வாக்காளர் வரைவு பட்டியலில் இல்லை என குற்றம்சாட்டி பேட்டி அளித்த போது, நீங்கள் கூறிய அடையாள அட்டை எண் (ஆர்ஏபி2916120) தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாத எண். தேர்தல் ஆணையத்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட, நீங்கள் வழக்கமாக வாக்களிக்க பயன்படுத்திய அடையாள எண் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எனவே, பேட்டி அளித்த போது நீங்கள் காட்டிய வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரங்களை வழங்குங்கள். அது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் தேர்தல் அதிகாரி சார்பில் தேஜஸ்விக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து தேஜஸ்வி மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதே போல, சிபிஐ (எம்எல்) கட்சியின் எம்பி சுதாமா பிரசாத்தின் மனைவிக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post பீகார் அரசியலில் பரபரப்பு தேஜஸ்வியிடம் 2 வாக்காளர் அட்டை? பாஜ குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.
