×

பணமோசடி வழக்கில் முதல் கைது; அனில் அம்பானிக்கு இறுகும் பிடி: அமலாக்கத்துறை அதிரடி

மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் மீதான பணமோசடி வழக்கில், முக்கியப் புள்ளி ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வங்கி கடன் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி (66) வரும் 5ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.

மேலும், அனில் அம்பானி வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மீது அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக, அனில் அம்பானியின் குழுமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 50 நிறுவனங்கள் மற்றும் 25 நபர்களுக்குச் சொந்தமான 35 அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளுக்குப் பிறகே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட பல குழும நிறுவனங்கள், 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிஸ்வால் டிரேட்லிங்க் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வாலை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இதுவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கையாகும். ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் மற்றும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிடிபிஎல் நிறுவன அலுவலகங்களில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் பார்த்தசாரதி பிஸ்வால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பணமோசடி வழக்கில் முதல் கைது; அனில் அம்பானிக்கு இறுகும் பிடி: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Anil Ambani ,Mumbai ,Reliance Group ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...