×

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் 4 ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு

செங்கல்பட்டு, ஆக. 3: செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் சுமார் 4 ஆயிரம் கிலோ கஞ்சாவை போலீசார் எரித்து அகற்றினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனைகள் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், பதுக்கி வைத்து விற்பனையோர் செய்வோரை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 1,204 கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், 3993 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை எரித்து அழிக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் கஞ்சா பொருட்கள் எரித்து அகற்றும் பணியில் காவல்துறையினர் நேற்று ஈடுபட்டனர். வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் வழிகாட்டுதலின்பேரில் காஞ்சிபுரம் சரக காவல்துறை தலைவர் தேவராணி, வேலூர் சரக காவல்துறை தலைவர் தர்மராஜ், விழுப்புரம் சரக காவல்துறை தலைவர் உமா ஆகியோர் தலைமையில் 3993 கஞ்சா பொருட்களை போலீசார் எரித்து அகற்றினர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் 4 ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thenmelbagam ,Chengalpattu ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் ரூ.3...