×

நிழல் பட்ஜெட்டை நிஜமாக்கியது திமுக அன்புமணியின் பயணம் அதிமுக பி-டீம் போல் உள்ளது: ஜி.கே.மணி முன்னிலையில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேச்சு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், ஒகேனக்கல்லில் 3 நாள் ஆடிப்பெருக்கு விழா நடக்கிறது.

முதல் நாளான நேற்று, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, ஆடிப்பெருக்கு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி சுந்தரா டிராவல்ஸ் பஸ்சில் பயணம் செய்கிறார். அவர் என்ன செய்தார். அது ஒரு காமெடி பீஸ். தலையில் மைக்செட் மாட்டிக்கொண்டு அந்த உருவத்தை பார்ப்பதற்கே ஒரு காமெடி பீஸ் ஆக தெரிகிறது. அன்புமணி உரிமை மீட்போம் என சொல்கிறார். எதை மீட்க போகிறார் என்று தெரியவில்லை. தலைவர் ஜி.கே.மணிக்கு தான் தெரியும். இடஒதுக்கீடு கேட்டு அவர்கள் போராடுவதோடு சரி. இதற்காக சட்டத்தை கொண்டு வந்தது திமுக. பாமக நிழல் பட்ஜெட் போட்டார்கள்.

நாங்கள் நிஜ பட்ஜெட்டை போட்டு ஆட்சி நடத்தினோம். விவசாயிகளுக்கு கொடுத்தோம். இவர்கள் இட ஒதுக்கீடுகள் கேட்டு போராட்டம் நடத்தி, பஸ்சை நிறுத்தினார்கள். மரத்தை வெட்டினார்கள். அப்போதைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், யாரும் கேட்கவே இல்லை. துப்பாக்கி சூடு நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர், ராமதாஸ், வீரபாண்டியாரை அழைத்து பேசி, ஆலோசனை கேட்டார். இட ஒதுக்கீடு கொடுத்தார்.

என்னவோ தெரியவில்லை. இப்ப சின்னஅய்யா (அன்புமணி) மக்கள் உரிமையை மீட்க போறேன் என்று சொல்கிறார். என்ன உரிமையை மீட்க போகிறார். அப்பாவிடம் கேட்க போகிறாரா? அவர் அதிமுகவின் பி-டீம் போல் பயணம் செய்கிறார். மக்கள் எங்களை அங்கீகரித்தார்கள். நாங்கள் செய்தோம். இப்போது சிலர், நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று வருகிறார்கள். சினிமாவில் தான் ஒருநாள் முதலமைச்சர் என்பதெல்லாம். அர்ஜூன் நடித்த படத்தில் ஒருநாள் முதல்வர். அவர் கையிலே மிஷின் எடுத்துக்கொண்டு போவார். அதே இடத்தில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் எல்லாம் கொடுப்பார். ஆனால் நிஜத்தில் அப்படி செய்ய முடியாது.
இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

The post நிழல் பட்ஜெட்டை நிஜமாக்கியது திமுக அன்புமணியின் பயணம் அதிமுக பி-டீம் போல் உள்ளது: ஜி.கே.மணி முன்னிலையில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Anbumani ,AIADMK ,Minister ,MRK ,Panneerselvam ,GK ,Mani ,Dharmapuri ,Dharmapuri District Tourism Department ,Aadiperukku festival ,Okenakkal ,Tamil Nadu ,Agriculture and ,Farmers' Welfare ,Edappadi Palaniswami Sundara… ,GK Mani ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...