புதுடெல்லி: வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை இரட்டிப்பாக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் அல்லது பிற மாநில அரசு ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கான குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றனர். தேர்தல் ஆணையம் அண்மையில், ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை இரட்டிப்பாக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “கடந்த 2015ம் ஆண்டு முதல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க, புதுப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உதவும் வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் தற்போது தங்கள் பணிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வருகின்றனர். இந்த தொகை ஆண்டுக்கு ரூ.12,000ஆக உயர்த்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வோருக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படுகிறது.
வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000-ஆகவும், தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு உதவி அதிகாரிகளுக்கு முறையே ஆண்டுக்கு ரூ.30,000 மற்றும் ரூ.25,000 கவுரவ ஊதியமாக வழங்கப்படும். இதுதவிர பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர் பட்டியல் அலுவலர்களுக்கு ரூ.6,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
