காஞ்சிபுரம், ஆக.2: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அறங்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து ஜாதி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த புகாரின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இந்த, கோயிலின் அறங்காவலராக கடந்த 2023ம் ஆண்டு ஜெகநாதன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த, மார்ச் மாதம் 30ம் தேதி கோயில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அறங்காவலர் ஜெகநாதனிடம், சமூக ஆர்வலர்களான டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகிய சகோதரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அறங்காவலர் ஜெகநாதனை ஜாதி ரீதியாக கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அந்த, புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஜாமீன் கோரி சகோதரர்கள் மனு செய்திருந்தனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிவகாஞ்சி போலீசார் சகோதரர்கள், டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெறும் தவறுகளை அவ்வப்போது இவர்கள் புகார் மனுக்களாக அளித்திருந்ததும், அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.
