சென்னை: தமிழில் வெளியான ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களுக்கு பிறகு அஜித் குமார் கார் ரேஸில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். அதற்காக தனது பெயரில் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி, உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகள் வென்று வருகிறார். முன்னதாக துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸில் பங்கேற்று 3வது பரிசு பெற்றார். பிறகு பெல்ஜியம் நாட்டில் நடந்த ரேஸில் கலந்துகொண்டு 2வது இடத்தை பிடித்தார். தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பல்வேறு விதமான கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்றார். நேற்று நடந்த போட்டியில் அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. நல்லவேளையாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஒரு வளைவில் வேகமாக திரும்பும்போது, பழுதாகி நின்றிருந்த மற்றொரு கார் மீது அஜித் குமாரின் கார் மோதியது. அந்த காரின் மீது மோதாமல் இருக்க அவர் தீவிர முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அஜித் குமாரின் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
சர்க்யூட்டில் சிதறிக்கிடந்த கார் பாகங்களை அகற்றிய ஊழியர்களுடன் இணைந்து அஜித் குமாரும் வேகமாக கார் பாகங்களை அப்புறப்படுத்தினார்.
The post இத்தாலியில் நடக்கும் ஜிடி 4 ரேஸ் மீண்டும் கார் விபத்தில் சிக்கினார் அஜித் குமார் appeared first on Dinakaran.
