×

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளாவில் 6 நிபா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கோழிக்கோடு: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயதான நபர் கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த நபருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் முன்னதாக அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கேரளாவில் கடந்த சில தினங்களில் நிபா வைரஸ் பாதிப்பால் 2வது நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

இதனடிப்படையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்புகளின் அடிப்படையில் 46 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அநாவசியமாக மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நிபா வைரஸ் அறிகுறிகள், தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த விபரங்களை கொடுக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளாவில் 6 நிபா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : 6 ,Nipah virus outbreak ,Kerala ,Kozhikode ,Palakkad district ,Palakkad ,Malappuram ,Kannur ,Wayanadu ,Thiruchur ,Kerala State Palakkad ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!