×

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: கைதான நபர் குற்றவாளி என தீர்ப்பு

திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே, ஓடும் ரயிலில், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர் வழக்கம் போல தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பிப்ரவரி 7ஆம் தேதி பயணம் செய்தபோது, மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்த ஹேமராஜ் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதனால் கத்திக் கூச்சலிட்ட கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார்.

ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாக இருந்துள்ளது. உயிருக்குப் போராடியவரை மீட்டு மருத்துவமனைக்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பினர். அவரது கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு அறுவைசிகிச்சைகள் நடத்தப்பட்டன. ரயில்வே காவல்துறையினர் ஹேமராஜை கைது செய்தனர்.

குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டு, அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார். ஹேமராஜுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

The post ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: கைதான நபர் குற்றவாளி என தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Vellore district ,K.V. Kuppam, Hemaraj ,Chittoor, Andhra Pradesh… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...