×

தோகைமலை அருகே வரகூரில் மாடு மாலை தாண்டும் திருவிழா

தோகைமலை : தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் வரகூரில் நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் கரூர் மாவட்ட சலை எருது மாடு முதல்பரிசு பெற்றது.கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தொண்டமாங்கிணம் ஊராட்சிக்கு உட்பட்ட வரகூரில் வசிக்கும் கம்பலத்துநாயக்கர் சமூகத்தினருக்கு கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் சின்னக்காரி, பெரியகாரி எருதுக்குட்டை கோயில்கள் அமைந்து உள்ளது.

இந்த கோயிலில் மாலை தாண்டும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனைஒட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது.

அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 10 நாள் விரதம் இருந்து கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் உள்ள எருதுகுட்டை சாமிக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.இதனைத்தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் தேவராட்டத்துடன் சின்னக்காரி, பெரியக்காரி எருதுக்குட்டை சாமிக்கு கரகம் பாலித்து சிறப்பு பூஜை செய்தனர்.

இதேபோல் 2ம் நாள் ஒயிலாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் மற்றும் தமிழர்களின் பாரம்பரியமிக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் சாமி தரிசனம் செய்தனர். 3ம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 14 மந்தையர்கள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் மந்தையர்களை வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் சலை எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டையுடன் கோயில் எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எல்லைசாமி கோயிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து கோலகம்பளி மந்தை நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 400 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் முதலாவதாக திருச்சி கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை ஊராட்சி வாலியம்பட்டி கோணதாதா நாயக்கர் மந்தை மாடும், 2வதாக கூடலூர் ஊராட்சி பேரூர் தாதல்மாதா நாயக்கர் மந்தை மாடும், 3வதாக இனுங்கூர் சுக்காம்பட்டி விருகாஜி மந்தை மாடும் ஓடி வந்து எல்லைகோட்டை தாண்டி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை தூவி வரவேற்று எலுமிச்சை பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோயிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சாமிகளுக்கு மஞ்சள் நீராட்டுடன் விடையாற்றி நடந்தது. இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தோகைமலை அருகே வரகூரில் மாடு மாலை தாண்டும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : COW EVENING CROSSING FESTIVAL ,VARAKUR ,DOGAIMALA ,Dogaimalai ,Karur District Salai Ostru Cow ,Thondamanginam Varakur Cow Thandu Festival ,Dohamanginam Varakur ,Kolagampali ,Gambalathunayakar ,Donthamanginam Uratchi, Karur District ,Dokaimalai ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்