×

போதிய விலை கிடைக்காததால் மா சாகுபடிக்கு பதில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்: பாரூர் பெரிய ஏரியில் இன்று நீர் திறப்பு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்தாண்டு மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நஷ்டமடைந்த விவசாயிகள், மா சாகுபடிக்கு பதிலாக நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்தாண்டு வழக்கத்தை காட்டிலும் மா விளைச்சல் அதிகரித்தது. ஆனால், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும், மார்க்கெட்டுகளில் விலை குறைந்து, கிலோ ரூ.10க்கு விற்பனையானது. போதிய விலையின்றி மா விவசாயிகள் நஷ்டமடைந்தனர். மேலும் சிலர் கால்நடைகளுக்கு உணவாக விட்டுள்ளனர். சில விவசாயிகள் சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் விரக்தியடைந்த மா விவசாயிகள், கடந்த சில வாரமாக போச்சம்பள்ளி தாலுகா பகுதிகளில் உள்ள மாமரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். மேலும், தற்போது நெல் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனால், இந்தாண்டு நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பாண்டு பரவலாக மழை பெய்ததால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை, 2ம் போக பாசனத்திற்கு கேஆர்பி அணை மற்றும் பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். தண்ணீர் திறந்தால் நேரடியாக 9 ஆயிரத்து 12 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில், சில பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்தி, தற்போது நெல் நடவு செய்து வருகின்றனர். வேலம்பட்டி பகுதிகளில் தற்போது 2ம் போக நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பெய்த மழையால், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் 2ம் போக நெல் சாகுபடிக்கு, கிணற்று நீரை பயன்படுத்தி நெல் நடவு செய்து வருகிறோம். சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நம்புகிறோம். தற்போது போச்சம்பள்ளி தாலுகா, வேலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் நாற்று நடவு முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினரை அழைத்து நடவு பணி மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் நிலத்தில் நெல் நடவு செய்யும் போது, பதிலுக்கு நாங்கள் சென்று நடவு பணியில் ஈடுபடுவோம்,’ என்றனர். இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போச்சம்பள்ளி தாலுகா, பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இன்று(10ம் தேதி) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்டும், பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்து விட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் கனஅடி வீதம் இன்று முதல் வரும் நவம்பர் 11ம் தேதி வரை 130 நாட்களுக்கு 361 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள 2397 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போதிய விலை கிடைக்காததால் மா சாகுபடிக்கு பதில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்: பாரூர் பெரிய ஏரியில் இன்று நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Parur Periya Lake ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்