×

முருகமலை அடிவாரப்பகுதிகளில் புதிய நீர்தேக்க தடுப்பணைகள்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே உள்ள முருகமலை அடிவாரப்பகுதிகளில் புதிய நீர்தேக்க தடுப்பனைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி முருகமலை, மஞ்சளாறு அணை கிராமத்தில் தொடங்கி தேவதானப்பட்டி வருவாய் கிராமம், டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, எண்டப்புணி மற்றும் கீழவடகரை வருவாய் கிராமங்களை உள்ளடங்கிய அதிக பரப்பளவை கொண்டது. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் முருகமலை அடிவாரப்பகுதி தேவதானப்பட்டியில் ஆரம்பித்து, பெரியகுளம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பருவமழை காலங்களில் இந்த முருகமலையில் பெய்யும் மழைநீர் நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது. இந்த நீர்வழித்தட ஓடைகளை மறித்து குறுக்கே, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், தமிழ்நாடு தரிசுநில மேம்பாட்டுத்திட்டம், பொதுப்பணித்துறை வாரியம், கிராம ஊராட்சிகளின் மூலம் நூறுநாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பனைகள் கட்டப்பட்டது.

பல்வேறு காலங்களில் பல திட்டங்களில், நிலத்தடி நீரை உயர்த்தும் நோக்கில் தடுப்பனைகள் கட்டப்பட்டது. இந்த ஓடைகளின் குறுக்கே மறித்து தடுப்பனைகள் கட்டிய பின் பருவமழை காலங்களில் மழைநீர் ஓடைகளில் வந்து தடுப்பனைகளில் தேங்கியது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து, புஞ்சை மானாவாரி நிலங்களில் புஞ்சை தோட்டமாக மாறி விவசாயம் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணைகள் கட்டிய பின் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் அதிகளவு சாகுபடி பயிர்கள் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தனர். இந்நிலையில் தடுப்பனைகளில் படிப்படியாக மண் மேவ தொடங்கியது. ஆண்டுக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக மண் மேவி, தடுப்பணைகளில் நீர் தேக்க அளவை குறைத்துக்கொண்டே சென்றது.

அதற்கு பின் தடுப்பணைகளில் முற்றிலும் மண் மேவி, சில ஆண்டுகளாக பழைய தடுப்பணைகள் பருவமழை காலங்களில் ஓடைகளில் வரும் தண்ணீர் தேங்காமல் பயனற்று போனது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் மீண்டும் மானாவாரி நிலங்களாக மாற தொடங்கியுள்ளது. முருகமலை அடிவாரப்பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ள பல இடங்களில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடைகள் செல்கிறது. இதில் சில இடங்களில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டு, தற்போது பயனற்று கிடக்கிறது. ஆகையால் தடுப்பணைகள் இல்லாத இடங்களில் ஓடைகளின் குறுக்கே புதிய தடுப்பனைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சில்வார்பட்டி விவசாயிகள் நல சங்க பொறுப்பாளர் முத்துக்காமாட்சி கூறுகையில், தற்போது தமிழக அரசு விவசாயிகளின் பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் தேவைகளை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி, அதனை நிவர்த்தி செய்து, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தை படுத்துதல், புதிய தொழில்நுட்ப பயிற்சிகள், விவசாய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் என சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று தேவதானப்பட்டி முருகமலை அடிவாரப்பகுதிகளில் உள்ள மானாவாரி விளை நிலங்களை புஞ்சை தோட்டங்களாக மாற்ற ஓடைகளின் குறுக்கே புதிய தடுப்பனைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம் தரிசுகளாக இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்றார்.

The post முருகமலை அடிவாரப்பகுதிகளில் புதிய நீர்தேக்க தடுப்பணைகள்: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Murugamalai ,Devadhanapatti ,Devadhanapatti Murugamalai ,Manjalar Dam ,Devadhanapatti Revenue Village ,T. Vaadipatti ,Silvarpatti ,Endapuni ,Keezhavadakarai Revenue… ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...