
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கு விதிக்கக் கூடிய பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கூடுதல் வரியை கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிவித்தார். இதில் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரி, இரும்பு, அலுமினியத்திற்கு 50 சதவீத வரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 25 சதவீத வரி என பல கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தினார். இது உலகளாவிய பொருளாதாரத்தை புரட்டிப் போடும் அபாயத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஒருவாரத்தில் கூடுதல் வரிகளுக்கு 90 நாள் தற்காலிக தடை விதிப்பதாக அறிவித்த டிரம்ப், அதற்குள் அமெரிக்காவுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிலையில், டிரம்ப் விதித்த 90 நாள் கெடு நாளையுடன் முடிகிறது. இதுவரை சில நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ள நிலையில், பல நாடுகளும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு நெருக்கடி தரும் வகையில், நேற்று முதல் கூடுதல் வரி விதிப்பு தொடர்பான எச்சரிக்கை கடிதம் அனுப்பும் பணி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘சில நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பல பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. ஆனாலும் கெடு முடிவதை எச்சரிக்கும் வகையில், ஒப்பந்தத்தை இறுதி செய்யாத நாடுகளுக்கு கடிதம் அனுப்பும் பணி தொடங்கப்படுகிறது. முதல் நாளில் 15 அல்லது 20 நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்படும். கெடு முடிந்த பிறகும் ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு ஏற்கனவே அறிவித்த கூடுதல் வரி வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும்’’ என்றார்.இதனால் இந்த விவகாரம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 90 நாள் கெடு முடிந்தாலும், மேலும் கூடுதல் அவகாசம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* இந்தியாவின் நிலை என்ன?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் விவசாயம், பால் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் இந்தியா தனது சிவப்பு எல்லைக் கோட்டை வரையறுத்து விட்டதாகவும், இனி அமெரிக்கா தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த வாரம் அளித்த பேட்டியில், ‘‘வர்த்தக ஒப்பந்தத்தில் காலக்கெடுவை முக்கியமாக பார்க்கவில்லை. தேசத்தின் நலனே முக்கியம்’’ என்றார். எனவே நாளைக்குள் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யுமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கான 90 நாள் கெடு நாளையுடன் முடிகிறது: எச்சரிக்கை கடிதம் அனுப்பும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.
