×

அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை: 7,783 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

சென்னை: சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என ஒரு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திமுக அரசு 2021ம் ஆணடு பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. கடந்த 4 ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மையங்களை இடமாற்றம் செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன் அடிப்படையில்தான், அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை, பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மையத்தினை குறு மையமாகவும், குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாக மாற்றிடவும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில், புதிய மையங்களை துவக்கிடவும், குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைத்திடவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும், மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பித்திடவும், கடந்த 6 மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்பத்தப்படவில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போதும் 54,483 குழந்தைகள் மையங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும். நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் புதிதாக 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலி பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முக தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை: 7,783 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Minister ,Geethajeevan ,Chennai ,Minister of Social Welfare and Women's Rights ,P. Geethajevan ,Government of Dimuka ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...