- திண்டுக்கல்
- மார்க்சிஸ்ட்
- பாஜக
- இந்து முன்னணி
- பாஜக கிழக்கு மாவட்டம்
- துணை ஜனாதிபதி
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தாடிகொம்பு
- திண்டிகுல்...
- தின மலர்
திண்டுக்கல்: திண்டுகல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்து முன்னணியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பாஜ கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மக்கள் சந்திப்பு இயக்கம் பிரசாரம் நடந்தது. அப்போது ஒன்றியச் செயலாளர் சரத்குமார், பாஜ அரசை கண்டித்தும், மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் பேசினார். இதையடுத்து இந்து முன்னணியினர் அங்கு திரண்டு வந்து, மார்க்சிஸ்ட் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் – பெங்களூரு நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைகலப்பில் காயமடைந்த மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், இந்து முன்னணியை சேர்ந்த வினோத் ஆகியோர் திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களை பார்க்க வந்த இந்து முன்னணி, பாஜ கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜிஹெச் முன்பு மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். போலீசார் பாஜவினரை அப்புறப்படுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்திய போது அவர்கள் திடீரென ஜிஹெச் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணியினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜ திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியை 2 பேர், பாஜ, இந்து முன்னணியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
The post திண்டுக்கல்லில் பரபரப்பு மார்க்சிஸ்ட்-பாஜவினர் பயங்கர மோதல்; இந்து முன்னணியினரும் கைகலப்பு appeared first on Dinakaran.
