மதுரை: எஸ்.ஐ.ஆர் மூலம் எங்க குடும்ப ஓட்டுகளையே பிரிச்சுட்டாங்கப்பா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் அதிமுக சார்பில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை; ஏமாற்றுபவர்களுக்கு கிடையாது. சூப்பர் ஸ்டார் படத்தில் சொல்வதுபோல, எடப்பாடி பழனிசாமி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவார்’ என்றார். அப்போது அதிமுகவினர் எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தனர். உடனே செல்லூர் ராஜூ, `ஏம்பா, கைதட்ட மாட்டீங்களா? பிரியாணி எல்லாருக்கும் இருக்கு’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், புதிதாக கட்சி ஆரம்பித்த சினிமா நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆர் புகழைத்தான் பாடுகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனைக் கட்சிகள் சேர்ந்தாலும் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. எஸ்ஐஆர் திருத்த பணியில் எங்களுடைய குடும்ப ஓட்டுகளையே பிரிச்சுட்டாங்கப்பா. இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும் கூறினேன். குடும்பம் ஒற்றுமையாக இருந்தால்தான் நல்லது என்று அவரிடம் கூறினேன். இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.
