×

சீனியர் என்பதால் சலுகை வழங்க முடியாது ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியுமா? தமிழ்நாடு அரசு இன்று பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள 17 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவன் ஏ.டி.ஜி.பி ஜெயராமின் காரில் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.

மேலும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்திக்கும் நிபந்தனை பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி ஜெயராமன் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல்புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று கைது நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.டி.ஜி.பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தான் ஒரு எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் தனக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு எந்தவித சம்மந்தமும் கிடையாது. நான் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. இருப்பினும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். மேலும் எனது 28 ஆண்டுகால பணியில் என் மீது எந்தவித அவதூறும் கிடையாது.எனவே எனது பணி இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன் மூத்த அதிகாரி என்பதற்காக சலுகை வழங்க முடியாது. இருப்பினும் அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியுமா?. இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு நாளைய தினமே (இன்று) உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மன்மோகன், கடந்த 18 ஆண்டு கால எனது பணிக்காலத்தில் உயர்நீதிமன்றம் இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்ததை நான் பார்த்தது கிடையாது என்ற கருத்தை தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post சீனியர் என்பதால் சலுகை வழங்க முடியாது ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியுமா? தமிழ்நாடு அரசு இன்று பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ATGP ,Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,Thiruvalangadu ,Tiruvallur district ,A.D.G.P ,Jayaram ,Puratchi Bharatham… ,Jayaraman ,Dinakaran ,
× RELATED ராணுவ வீரர்கள், அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு