×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருப்பு

 

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ெசார்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 30ம்தேதி முதல் ஜன.8ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதிக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை அதிகளவு பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். கடுமையான குளிர் மற்றும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருப்பதால் அனைவருக்கும் அறை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அவர்கள் சாலையோரங்களில் முதியோர், குழந்தைகளுடன் பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று கோயிலில் 73,524 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 29,989 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.88 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டது.

இதனால் காத்திருப்பு அறைக்கு அருகே உள்ள சிலாதோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பிறகே ஏழுமலையானை தரிசிக்க முடியும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது.

Tags : Tirupathi Eumamalayan Temple ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,Swami ,Tamil Nadu ,
× RELATED தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது...