சேலம்: சேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு துண்டை குறுக்கே போட்ட மர்மநபர்கள் குறித்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் வழியாக நேற்று முன்தினம் இரவு 9.45மணிக்கு ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது 10 அடி நீள உடைந்த இரும்பு தண்டவாளத்தை, ரயில் செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே மர்மநபர்கள் போட்டு விட்டு சென்றுள்ளனர். அந்த இரும்பு துண்டு ரயில் இன்ஜினின் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டது. உடனே லோகோ பைலட், ரயிலை நிறுத்திப் பார்த்த போது, இன்ஜினில் தண்டவாள இரும்பு துண்டு சிக்கியிருந்தது தெரிந்தது.
தகவலறிந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி ரயிலில் சிக்கியிருந்த 10 அடி நீள தண்டவாள துண்டை அகற்றினர். அதன் பின்னர், மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டவாள இரும்பு துண்டை வைத்தது யார் என தாழையூர் ரயில் பாதை அருகே உள்ள வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேகப்படும்படி யாராவது வந்து சென்றார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டனர். ரயில் பாதை அருகே இரண்டு தண்டவாள துண்டுகள் பயன்பாட்டிற்காக போடப்பட்டிருந்தது. அதில் ஒன்றை மட்டும் தூக்கி ரயில் பாதையில் மர்மநபர்கள் போட்டுள்ளனர். அப்பகுதியில் கும்பலாக அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் யாரேனும் இச்சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்ஜினில் சிக்கி மீட்கப்பட்ட தண்டவாளத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றி அதில் பதிந்துள்ள கைரேகைகளை வைத்தும் விசாரிக்கின்றனர்.
* ரயிலில் வந்த ஐகோர்ட் நீதிபதிகள்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோட்டில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், கிருஷ்ணன், ராமசாமி, இளந்திரையன், கல்யாணசுந்தரம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சந்திரசேகர் ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அவர்களும் நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயிலில் தவித்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தண்டவாளத்தில் பெரிய இரும்பை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி: டிரைவர் செயல்பாட்டால் தப்பியது; மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.
