சென்னை: மனுஷி படத்துக்கு சென்சார் சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி 2024 செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது.
இதை எதிர்த்தும், படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும் பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தணிக்கை சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் எந்த காட்சிகள், எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என்று குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில், “மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருக்கிறோம், அதில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் என்ன வகையான சான்று வழங்கப்படும் என்ற முடிவை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், சென்சார் போர்டு முடிவுக்கு அறிக்கை அனுப்பப்படும்,” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு ஆய்வு குழு படத்தை பார்த்து, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்தபின் வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி விசாரணையை 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு, “மனுஷி” படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக உள்ளதாக ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. மேலும், மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனுஷி படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது. மேலும், சென்சார் போர்டு ஆட்சேபங்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The post மனுஷி படத்துக்கு சென்சார் சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!! appeared first on Dinakaran.
