×

தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்க முடியாது.. மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது ஐகோர்ட் வேலையில்லை: உச்சநீதிமன்றம் காட்டம்!!

டெல்லி: கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தக் லைஃப். இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கன்னடம் – தமிழ் உறவுக் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை. மேலும் தக் லைஃப் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என கன்னட ரக்‌ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தை திரையிடும்போது பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது என்றும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாவதை தடுக்க முடியாது. ஒருவர் சொன்னது தவறு என்றால் அது குறித்து விவாதம் நடத்த வேண்டும். கன்னட மொழிக்கு எதிராக கமல் பேசியிருந்தால் பெங்களூருவைச் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அவர் சொன்னது தவறு என எடுத்துக்கூற வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம், தக் லைஃப் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது.

The post தக் லைஃப் படத்துக்கு தடை விதிக்க முடியாது.. மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது ஐகோர்ட் வேலையில்லை: உச்சநீதிமன்றம் காட்டம்!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Supreme Court ,Delhi ,Karnataka ,Kamal Hassan ,Silambarasan ,Maniratnam ,Kannada ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...