×

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் சிப்ட் கவுர்: 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அசத்தல்

மூனிச்: ஜெர்மனியில் நடந்து வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜெர்மனியின் மூனிச் நகரில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில், துப்பாக்கி சுடுதலுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் ஒன்றான, 10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் வெண்கலப்பதக்கம் வென்று, ஏற்கனவே சாதனை படைத்திருந்தார்.

அதன் பின், இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் உள்ளிட்ட பல இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி எட்டாக்கனியாக இருந்தது. இந்நிலையில், 50 மீட்டர் ரைபிள்ஸ் 3 பொசிசன்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா (23) உள்ளிட்ட 8 வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியில் நார்வே வீராங்கனை ஜீனட் ஹெக், 466.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சுவிட்சர்லாந்து வீராங்கனை எமெலி ஜேக்கி, 464.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா, 453.1 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இப்போட்டிகளில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

The post உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் சிப்ட் கவுர்: 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Sipt Kaur ,World Cup ,Munich ,Sipt Kaur Samra ,World Shooting Championship ,Germany ,Munich, Germany ,International Shooting Sport Federation ,ISSF ,Dinakaran ,
× RELATED மகளிர் முதல் ஓடிஐ இந்தியா அபார பந்து வீச்சு