மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே பாரம்பரிய மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் 3 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, 3-0 என தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், 4வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் துவங்கும் பாக்சிங்டே டெஸ்ட்டான இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் பேட்டிங்கை தொடங்கினர். அணியின் ஸ்கோர் 27ஆக இருந்த போது, ஹெட் 12 ரன்னில் கஸ் அட்கின்சன் பந்தில் போல்டானார். ஜேக் வெதரால்ட் 10 ரன்னிலும், பின்னர் வந்த லாபுசானே 6 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும் ஜோஸ் டங் பந்தில் அவுட் ஆகினர். உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன் எடுத்திருந்தது.
பின்னர் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா 29 ரன்னில் கஸ் அட்கின்சன் பந்தில் கேட்ச் ஆனார். அலெக்ஸ் கேரி 20 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 17 ரன்னில் ரன்அவுட் ஆனார். மைக்கேல் நெசர் அதிகபட்சமாக 35 ரன் அடித்தார். ஸ்டார்க் 1 ரன்னிலும், கடைசி விக்கெட்டாக போலண்ட் டக்அவுட்டும் ஆகினர். 45.2 ஓவரில் ஆஸ்திரேலியா 152 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து பவுலிங்கில் ஜோஸ் டங் 5, கஸ் அட்கின்சன் 2, கார்சே, பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பிறகு, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் 2 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். ஜாக் கிராலி 5, பெத்தேல் 1, ஜோ ரூட் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 16 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இங்கிலாந்து தடுமாறியது. 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாரி புரூக்-பென் ஸ்டோக்ஸ் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.
புரூக் 41 ரன்னில் ஸ்காட் போலண்டு பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், பென் ஸ்டோக்ஸ், கார்சே, அட்கின்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 29.5 ஓவரில் 110 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நெசர் 4, போலண்ட் 3, ஸ்டார்க் 2, கிரீன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஒரேநாளில் 2 அணியும் 20 விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட் ஆனது.
முதல் நாளில் பாஸ்ட் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 46 ரன் முன்னிலையோடு ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை துவங்கியது. ஒரு ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய போலாண்டு 4 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டத்தில், வலிமையான இலக்கை நிர்ணயிக்க ஆஸ்திரேலியா முயற்சிக்கும்.
* ஒரே நாளில் 20 விக்கெட்
* இங்கிலாந்து பாஸ்ட் பவுலர் ஜோஸ் டங், முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவர் 2025ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
* பாக்சிங் டே போட்டியில், முதல் நாளில் 20 விக்கெட் மெல்போர்ன் மைதானத்தில் வீழ்த்தப்பட்டது இதுவே முதல் முறை.
* இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3000 ரன்களை கடந்தார். அவர், 3,468 பந்துகளில் இந்த ரன்னை எட்டியுள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக வேகமான ரன் வேட்டையாகும்.
* ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 212 கேட்ச்களை பிடித்து 2வது இடத்திற்கு முன்னேறினார். முதல் இடத்தில் 214 கேட்ச்களுடன் ஜோ ரூட்டும், 3வது இடத்தில் 210 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட்டும் உள்ளனர்.
* மெல்போர்ன் பாக்சிங் டே கிரிக்கெட் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க 90 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அந்த மைதானத்தின் மொத்த இருக்கைகளும் நிரம்பின.
