ஒரு நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டார். அவருடைய நோக்கம் ஆன்மிக நூல்களில் இந்தக் கேள்விக்கான பதில் எப்படி அமைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். கேள்வி இதுதான்
‘‘கடவுளை அடைவதற்கான வழி என்ன?’’
ஆன்மிகப் பெரியவர்கள் இதற்கு பல்வேறு வழிகளைக் காட்டுகிறார்கள். அவர்கள் காட்டிய வழிகள் எல்லாம் ஒவ்வொரு சமயங்களாக இருக்கின்றன. கீதை போன்ற நூல்களில் பக்தி யோகத்தால் அடையலாம். கர்ம யோகத்தால் அடையலாம். ஞான யோகத்தால் அடையலாம். சரணாகதியால் அடையலாம் என்று பல வழிகள் சொல்லப்படுகின்றன.
ஆனால் இவைகளெல்லாம் ஒரு மனித வாழ்நாளுக்குள் பயிற்சி செய்து, ஞானத்தைப் பெற்று, கடவுளை அடைய முடியுமா என்றால் நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு மலைப்பாகத் தெரியும்.
நான் சமய நூல்களில் உள்ள சில வழிகளைச் சொல்லிவிட்டு ‘‘இதைவிட எளிமையான வழி ஒன்று இருக்கிறது ஆனால் அதை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை’’ என்றேன்.
‘‘அப்படியா பெரிய பெரிய ஞானிகளுக்குத் தெரியாதபடி உங்களுக்கு தெரிந்துவிட்டதா?’’ என்றார் அவர். நான் சொன்னேன்.
‘‘ஞானிகளும் சொன்ன வழிதான் அது. இதில் என்ன பிரச்னை என்றால், இவ்வளவு எளிமையான வழியிலும் கடவுளை அடையலாமா என்பதே சந்தேகமாக வந்துவிடும்’’
இப்படிச் சொல்லிவிட்டு
‘‘உங்கள் கேள்வியை இப்படி மாற்றி கேட்டுப் பார்த்தால் விடை எளிதாக கிடைத்து விடும்’’ என்றேன்.
‘‘எப்படி?’’ என்றால் அவர்.
‘‘கடவுளை நாம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதைவிட, கடவுள் நம்மை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் மிக எளிதாக விடை கண்டுபிடித்து விடலாம்.’’
‘‘அப்படியா?’’
‘‘நிச்சயமாக. அதற்கு ஒரு கதை உங்களுக்குச் சொல்லுகின்றேன். இந்த கதை நம்முடைய உறவினரான பாகவதர் ராஜமோகன் அவர்கள் சொன்ன கதையைப் பார்ப்போம்.
ஒரு சாலை. ஒரு பையன் நடந்து சென்று கொண்டிருக்கின்றான். திடீரென்று ஒரு வண்டி வந்து அடித்துப் போட்டுவிட்டு நிற்காமல் சென்று விட்டது. பையன் கீழே விழுந்து துடிக்கின்றான். தலையில் அடிபட்டு ரத்தம் கசிகிறது. எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆட்டோவை கூப்பிடு, தண்ணீரைக் கொண்டுவா, என்றெல்லாம் சொன்னார்களே தவிர, உடனடியாக அவர்கள் செயல்படவில்லை.
திடீரென்று ஒரு அம்மையார் ஓடி வந்தார். ‘‘ஐயோ’’ என்று கதறி, அந்தப் பையனைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டார். அவர் அழுகையைப் பார்த்த உடனே ‘‘ம்…பையனுக்கு தாய் வந்துவிட்டாள் இனி கவலை இல்லை அவள் பார்த்துக் கொள்வாள்’’ என்று நினைத்தார்கள்.
அவள் கதறி, ஒரு ஆட்டோவை அழைத்தவுடன், அந்த ஆட்டோக்காரர் வந்தார். பையனை அழைத்துக் கொண்டு வேகமாக ஒரு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார். சேலை முழுதும் ரத்தம்.
மருத்துவமனையில் சேர்த்தவுடன் சோதித்து பார்த்துவிட்டு சில மருந்துகள் எழுதி ‘‘உடனே இதை வாங்கி வாருங்கள். பையன் ஆபத்தான நிலையில் இருக்கிறான்’’ என்று சொன்னவுடன், அந்தத் தாய் சீட்டை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த ஒரு மருந்தகத்திற்குச் சென்றார். மருந்தை கொடுத்த மருந்துக் கடைக்காரர் ‘‘அம்மா இவ்வளவு பணம் ஆகிறது’’ என்று சொன்னவுடன் அந்த அம்மையார் அதிர்ச்சி அடைந்தார். அவ்வளவு பணம் அவர் கையில் இல்லை. கையைப் பிசைந்தார்.
‘‘என்னம்மா பணம் இல்லையா?’’ என்று மருந்துக் கடைக்காரர் மருந்தை உள்ளே வைப்பதற்கு திரும்ப, அந்த அம்மையார் அழுது கொண்டு”
ஐயா பணம் இல்லை என்னுடைய காதணி ஒரு பவுன் வைத்துக்கொண்டு மருந்தைக் கொடுங்கள். நான் பணம் கொடுத்து இதை மீட்டுக் கொள்கிறேன்’’ என்றார். கடைகாரருக்கு அந்த காதணி தங்கமா போலியா என்று சந்தேகமாக இருந்தது.
‘‘உடனே அந்த அம்மையார் தன்னிடமிருந்த இரண்டு வளையல்களையும் கொடுத்து இதையும் வைத்துக்கொள்ளுங்கள் நான் மாலை மீட்டுக் கொள்கிறேன் இப்பொழுது அவசரமாக மருந்து வேண்டும் மறுத்துவிடாதீர்கள்’’ என்று கெஞ்சியவுடன் என்ன நினைத்தாரோ, மருந்தைக் கொடுத்து விட்டார். மருந்து வாங்கிக் கொண்டு அவர் பதறியபடி போகும் வேகத்தைப் பார்த்த கடைக்காரர், ‘‘பாவம் பெத்த மனம் துடிக்கிறது’’ என்று சொல்லியபடி வேலையைக்
கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த அம்மையார் மருந்தோடு ஓடிப்போய் மருத்துவரிடம் கொடுத்தவுடன் சில சிகிச்சைகளைச் செய்துவிட்டு, ‘‘அம்மா ஒன்றும் கவலைப்படாதீர்கள். பையன் பிழைத்துவிட்டான்.’’ என்று சொல்லியவுடன் அந்த அம்மையார் ஓரத்தில் இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டு ஆசுவாசப் பட்டுக் கொண்டார்.
மருந்துக் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த அம்மாள் பதற்றத்தோடு போயிருக்கிறாள் பையனுக்கு என்ன ஆயிற்றோ என்று நினைத்து ‘‘சரி ஒரு நடை போய்ப் பார்த்து வருவோம் ஆறுதல் சொல்லிவிட்டு வருவோம்’’ என்று வந்தார். அம்மையாரைப் பார்த்தவுடன் அந்த அம்மையார் கண்ணீருடன் சொன்னார்.
‘‘ஐயா பையன் பிழைத்துவிட்டான். நீங்கள் சரியான நேரத்தில் கொடுத்த மருந்தால் அவன் பிழைத்துவிட்டான். நீங்கள் கடவுள் போல! உங்களுக்குக் கோடி புண்ணியம்.’’
‘‘சரி அம்மா நான் பையனைப் பார்க்கலாமா?’’ என்று சொன்னவுடன், வாருங்கள் என்று சொல்லி அழைத்துக் காண்பித்தார். மருந்துக் கடைக்காரர் பையனைப் பார்த்தார். அடுத்த நிமிடம் அவர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். ஏன் விழுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் தெளித்து கேட்டவுடன் அவர் கதறிக்கொண்டே சொன்னார்.
‘‘ஐயா இவன் என் பையன் எப்படி இங்கே வந்தான்? என்ன ஆயிற்று?’’ அப்பொழுதுதான் அந்த அம்மா சொன்னார்.
“ஐயா இந்தப் பையனைத்தான் வண்டி அடித்து விட்டது. பச்சை பிள்ளை. பார்க்க சகிக்கவில்லை. தாய் மனம் பொறுக்கவில்லை. பக்கத்தில் இட்லிக் கடை நடத்திக்கொண்டிருந்த நான் ஓடோடி வந்தேன். எப்படியோ பையன் பிழைத்துவிட்டான். என் மனம் நிம்மதி அடைந்தது. தன்னுடைய மகனை தகுந்த நேரத்தில் காப்பாற்றியதற்காக அந்த மருந்துக் கடைக்காரர் அந்த அம்மாவின் காலில் விழுந்தார். இதுதான் கதை. இந்தக் கதையை சொல்லிவிட்டு நான் கேட்டேன்.
‘‘கடவுள் வருவாரா என்று கேட்டீர்களே. இந்த சம்பவத்தில் கடவுள் வந்தாரா இல்லையா?’’
‘‘ஆம் வந்தார்’’
‘‘எந்த உருவத்தில் வந்தார்?’’
‘‘ஒரு தாயின் உருவத்தில் வந்தார்.’’
‘‘சரி அந்தத் தாய் அந்தப் பையனைப் பெற்ற தாயா?
‘‘இல்லை’’
‘‘அப்படியானால் கடவுள் தாயைவிட மேலானவர் அல்லவா. நான் ஆழ்வார் பாசுரத்தின் ஒரு வரியை சொல்லுகின்றேன். ‘‘பெற்ற தாயினும் ஆயின செய்யும்’’ என்று கடவுளைப் பற்றி சொல்லுகின்றார். உண்மைதானே?’’
‘‘உண்மைதான்’’ என்றார் அவர்.
தொகுப்பு: தேஜஸ்வி
The post கடவுள் எந்த உருவத்தில் வருவார்? appeared first on Dinakaran.