புதுச்சேரி: விசா காலம் முடிவடைந்த நிலையிலும் புதுச்சேரியில் வசிக்கும் பெண் உள்பட 2 பாகிஸ்தானியர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியானதை தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேறவும், விசாவை ரத்து செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரை சேர்ந்த ஹனிப்கான் (39), பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உறவுப்பெண் பவுசியாபானோவை கடந்த 2012ல் திருமணம் செய்து வசித்து வருகிறார்.
விசா 2022ல் காலாவதி ஆனபோதும் நீட்டிக்காமல் வசிக்கும் பவுசியாபானோ மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதேபோல, புதுச்சேரி பிராந்தியமான மாகேவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65), 2016ல் மருத்துவ விசாவில் வந்த நிலையில் இங்கேயே தங்கியுள்ளார். இவர் மீதும் தற்போது போலீசார் வழக்குபதிந்து, நோட்டீஸ் வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
The post புதுச்சேரியில் வசிக்கும் 2 பாகிஸ்தானியர் வெளியேற உத்தரவு appeared first on Dinakaran.
