திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் வினிதா (38). பேரூர்க்கடையில் அலங்கார செடிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பகலில் கடைக்குள் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். வினிதா அணிந்திருந்த 4 பவுன் செயின் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து பேரூர்க்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் வினிதாவை கொலை செய்தது பேரூர்க்கடையில் உள்ள ஒரு டீக்கடையில் பணிபுரிந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த ராஜேந்திரன் (49) என்பது தெரியவந்தது. கொலைக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றார்.
அதைத்தொடர்ந்து பேரூர்க்கடை போலீசார் தோவாளைக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். ராஜேந்திரன் மீது ஆரல்வாய்மொழியில் சுங்கத்துறை அதிகாரி, அவரது மனைவியை கொலை செய்த வழக்கு மற்றும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கு உள்பட 4 கொலை வழக்குகள் உள்ளன. இது தவிர திருப்பூர், அம்பத்தூர், தூத்துக்குடி ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகளும் உள்ளன. வினிதாவை கொலை செய்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனையும், ரூ.8.10 லட்சத்து 500 அபராதமும் விதித்தது. இந்தக் கொலையில் நேரடி சாட்சியம் எதுவும் இல்லாத நிலையில் கொலையாளி ராஜேந்திரனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
The post நகைக்காக இளம்பெண் கொலை குமரி தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.
