திருத்தணி, ஏப்.22: திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தணி அருகே புச்சிரெடிப்பள்ளி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிராம வீதி உலா நடைபெற்றது. மகாபாரத உற்சவ விழாவில் தினமும் பகல் நேரங்களில் மகாபாரதம் சொற்பொழிவு, இரவு நேரங்களில் கட்டைக்கூத்து கலைஞர்களின் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை அர்ஜூனன் தபசு, சனிக்கிழமை கர்ணன் மோட்சம் நாடகங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவில் இறுதி நாளான நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று துரியோதனனை பீமன் வதம் செய்யும் காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் விரதம் இருந்து மாலையில் தீமிதி திருவிழாவில் பங்கேற்றனர் விழாவில் கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணியளவில் கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்னி குண்டம் அருகில் சிறப்பு மலர் அலங்காரத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு வாணவேடிக்கை முழங்க கோவிந்தா…கோவிந்தா… என்ற பரவசத்துடன் 1000க்கும் மேற்பட்ட காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீமிதி திருவிழா, விழா குழுவினர் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் நேற்று காலை தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் தீமிதி திருவிழா நிறைவு பெற்றது.
The post திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்; 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர் appeared first on Dinakaran.
