தா.பழூர், ஏப்.18: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்புகுடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் வடபத்ரகாளியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு மா பொடி, மஞ்சள், தயிர், நெய், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வடபத்ர காளியம்மனுக்கு பூங்கரகம் எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் பூங்கரகம் தயார் செய்யப்பட்டு காப்பு கட்டி விரதம் இருந்த நபர் பூங்கரகத்தை தூக்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பரவசம் முழங்க பம்பை, படுக்கை, காளியாட்டத்துடன் வந்தனர். மாலை வட பத்திரகாளி அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் வீடுகள்தோறும் பக்தர்கள் பூஜை பொருட்களுடன் வழிபாடு செய்தனர்.
The post வேம்புகுடியில் வடபத்திர காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.
