பெரம்பலூர்,ஜன.7: வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரையும், அவரது மனைவியும் கைதுசெய்து சிறைவைத்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து பெரம்பலூர் புது பஸ்டாண்டு நுழைவாயில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை ராஜேந்திரன், வேப்பூர் கலிய பெருமாள், பெரம்பலூர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.கம்யூ.மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 20பேர் கலந்து கொண்டனர்.
