×

சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,882 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழ்நாட்டினை, தரவு மைய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மைய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை 26.11.2021 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.

இதன்படி, சிபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மைய உள்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில், 40 மெகாவாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், ஒரு அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் 1,882 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

2027-ஆம் ஆண்டிற்குள், சென்னையில், 13,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைச் செயலாளர் அருண் ராய், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* மேலும் 2 மையத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு…
சிபி நிறுவன தலைவர் ராஜூ வெஜஸ்னா பேசும்போது, ”ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் 13 மெகாவாட் திறனுடன் இந்த தரவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு, தற்போது முதற்கட்டமாக 1882 கோடி முதலீட்டில் தொடங்கியுள்ளோம். விரைவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, மேலும் இரண்டு தரவு சேமிப்பு மையங்களை அமைக்க உள்ளோம். இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்வரும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்றார்.

The post சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Siruseri Information Technology Park ,Chennai ,Tamil Nadu ,CBI Corporation ,Siruseri Technology Park ,Siruseri, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...