×

சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் மீண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

*வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் மீண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பேரூராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், டிராக்டர் மற்றும் பேட்டரி வண்டிகள் மூலம் சேரன்மகாதேவி ரவுண்டானா அருகில் உள்ள உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வந்தது.

இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த உரக்கிடங்கு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சாலை விரிவாக்கப்பணி முடிந்ததும் முன்னால் இருந்ததை விட சிறிய அளவில் உரக்கிடங்கு கட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது சேரன்மகாதேவி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்குகளான மான், மிளா, முயல் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் சிவந்தி மெட்ரிகுலேசன் பள்ளி பின்புறம் உள்ள மாப்பிள்ளையான் குளத்திலும் பேரூராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 10 நாளில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலையடிவாரத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களை நேரிடையாக ஆய்வு செய்து இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2018ல் சுட்டி காட்டிய தினகரன் நாளிதழ்

சேரன்மகாதேவி பேரூராட்சியில் கடந்த 2018 அக்டோபரில் சென்னை பேரூராட்சிகளின் தலைமை இயக்குநரின் ஆய்வு நடைபெற இருந்தது. இதனையடுத்து ரவுண்டானா அருகில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் தென்புறம் மலைபோல் சேகரித்து வைத்திருந்த குப்பை கழிவுகளை அதிகாரிகள் இரவு, பகல் பாராது டிராக்டர் மூலம் கொழுந்துமாமலையடிவாரத்திற்கு அப்புறப்படுத்தினர்.

மலையடிவாரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டது குறித்தும் இதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் தினகரன் நாளிதழில் கடந்த 4.10.2018ல் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மலையடிவாரத்தில் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு குப்பைகள் மண்ணுக்குள் மூடி மறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் இயற்கை வளம் பாழாவதோடு வனவிலங்குளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

The post சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் மீண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Kolzhundhumamalai ,Veeravanallur ,Nellai district ,Cheranmahadevi Town Panchayat ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...