சென்னை: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ரூ.650 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் சிக்கிய நிலையில், அமித்ஷாவை நேற்று முன்தினம் இரவு ஒன்றரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசினார் எடப்பாடி. அப்போது முன்னாள் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு குறித்து ஏராளமான ஆவணங்களை அமித்ஷா காட்டி பேசியதால் அதிர்ச்சியில் உறைந்தவர், பின்னர் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கூட்டணியில் இருந்தபோதே மோதல் எழுந்தது. குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தலின்போது மோதல் வலுத்தது. இதனால் அதிமுக, பாஜ தனித்துப் போட்டியிட்டன. மக்களவை தேர்தலிலும் இருவரும் தனித்தனி அணி அமைத்துப் போட்டியிட்டனர். மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே எழுந்த மோதல் காரணமாக கூட்டணி உடைந்தது.
அதன்பின்னர் இனி பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார். அவரது அறிவிப்பை நம்பித்தான் எஸ்டிபிஐ கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அப்போதும் இனி பாஜவுடன் கூட்டணி கிடையாது. அந்தக் கட்சி ஒரு மதவாத கட்சி என்று குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜ டெல்லி மேலிடம் விரும்பியது. இதற்காக அண்ணாமலையை பலிகொடுக்கவும் தயாராக இருந்தது. பல முறை பல விஐபிக்கள் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி மேலிடம் பேசியது. ஆனால் சம்மதிக்காமல் இருந்தார். இதற்காக வேலுமணி மற்றும் தங்கமணியின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகளில் ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்கினார். அப்போதும் எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. கடைசியாக எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.650 கோடிக்கு வரி முறைகேட்டை கண்டுபிடித்தனர். அதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்க சம்மதித்தார். நேற்று முன்தினம் காலையில் தலைமைச் செயலகம் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் அவரை வரவேற்க எம்எல்ஏக்களும் காத்திருந்தனர். அவர் வரவில்லை. பேரவை நடக்கும்போது வருவார் என்று எதிர்பார்த்தனர். அப்போதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, முக்கியமானவர்களை சந்திக்கும்போது தமிழக பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற தகவலே தெரிந்தது. இதைக் கேள்விப்பட்டதும் எம்எல்ஏக்களே அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி சென்ற எடப்பாடி மாலையில் கட்சி அலுவலகம் சென்றார். இந்த புதிய கட்சி அலுவலகத்தை டெல்லி செல்லாமல், காணொலி காட்சி வாயிலாகத்தான் எடப்பாடி திறந்து வைத்தார். டெல்லி சென்று விழா எடுத்து திறந்து வைத்தால், பாஜ மேலிட தலைவர்களை சந்திக்க வேண்டியது வரும். கூட்டணி குறித்து நெருக்கடி கொடுப்பார்கள் என்று கருதி டெல்லி செல்லாமல், சென்னையில் இருந்தபடியே திறந்து வைத்தார்.
ஆனால், இப்போது கட்சி அலுவலகத்தை பார்க்க வந்ததாகவும், யாரையும் சந்திக்கவில்லை என்று நிருபர்களிடம் தெரிவித்தார். பின்னர் திடீரென்று இரவு 8 மணிக்கு தம்பித்துரையின் வீட்டில் இருந்து அமித்ஷா வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 8.25 மணிக்கு அமித்ஷாவை சந்தித்தார். முதல் 25 நிமிடம் பேசும்போது, தம்பித்துரை, கே.பி.முனுசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். 8.50 மணி முதல், 10.30 மணி வரை அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பினாமியாக அவரது நிறுவனங்களில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து ஏராளமான ஆவணங்களை காட்டியதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரது ஊழல் குறித்த ஆவணங்களை காட்டியதாகவும் கூறப்படுகிறது. பல அமைச்சர்கள் சிறை செல்வதை பாஜதான் தடுத்திருக்கிறது என்றும் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உடனடியாக கூட்டணி என்று அறிவிக்காமல், தமிழக மக்கள் பிரச்னை குறித்து பேச வந்ததாக நேற்று காலையில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். கட்சி அலுவலகத்தை பார்க்க வந்தேன் என்று முதல்நாள் தெரிவித்தார். திறப்பு விழாவுக்கே நேரில் வராதவர், சும்மா பார்க்க மட்டும் ஏன் செல்கிறார் என்று கட்சி நிர்வாகிகளே கேட்க ஆரம்பித்தனர். இப்போது மக்கள் பிரச்னைக்காக சந்தித்ததாக கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், மீனவர் பிரச்னை குறித்து அவர் சம்பந்தப்பட்ட வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத்தான் சந்தித்திருக்க வேண்டும். நிதி கொடுக்க வேண்டும் என்றால் நிர்மலா சீதாராமனை சந்திக்க வேண்டும். இரு மொழிக் கொள்கை பிரச்னை என்றால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க வேண்டும். கேரளா, கர்நாடகாவுடன் நதிநீர் பிரச்னை குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும். ஆனால் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தாக கூறியுள்ளார். இவ்வளவு பிரச்னைகளை அவர் சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடியைத்தான் சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் அமித்ஷாவை சந்தித்ததில்தான் தற்போது கட்சியினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளுக்காகத்தான் அவர் சந்திருக்கிறார் என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள். மேலும், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்ததாகவும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை அமித்ஷா அறிவிப்பார் என்றும், இனி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ராமலிங்கம் ஆகியோர் மீதான விசாரணை கைவிடப்படும் என்று அப்போது அமித்ஷா உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி பாஜ தலைவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கட்டளையிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக பாஜ கூட்டணி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
The post உறவினர் ராமலிங்கம், மாஜி அமைச்சர்களை காப்பாற்ற பேரமா? அமித்ஷா-எடப்பாடி ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.