×

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகையில் 82 சதவிகிதத்தினருக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டமும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கும் உறுதி திட்டமும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.

இதன்மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்து மீட்கப்பட்டனர். இது மன்மோகன்சிங் ஆட்சியின் சாதனை என்று உலக நாடுகள் கூட பாராட்டியது. இதுகுறித்து சமீபத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, அதற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அந்த இரு திட்டங்களையும் முடக்குகிற வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், நீதிபதிகள் ஒன்றிய அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Congress ,Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu ,United Progressive Alliance government ,Parliament ,Dinakaran ,
× RELATED அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து