நன்றி குங்குமம் டாக்டர்
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை சொன்னேன். உடனே, அவர் உன் வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போடணும் என்றார். நாம் காலம் காலமாக மனதுக்குப் பிடித்தமான விஷயத்தை செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ உடனே நமது வீட்டில் இருப்பவர்கள் இனிப்பு பலகாரமான கேசரி, பாயசம் என்று செய்து கொடுத்து அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தியே பழக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட சமூக மக்களிடம் திடீரென்று வெள்ளை சர்க்கரை ஆபத்து என்றும், சர்க்கரை வியாதி என்றும் அனைத்து இடங்களிலும் பேசுபொருளாக மாறியிருப்பது எப்படி?
ஒரு பக்கம் சர்க்கரை வியாதி அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றும், நவீன மக்களிடம் சர்க்கரை வியாதியைப் பற்றி தேவையில்லாத பயத்தை மருத்துவத்துறையில் ஏற்படுத்துகிறார்கள் என்ற வதந்தி ஒரு பக்கம் வாட்ஸாப், யூடியூபில் தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நவீன மக்களிடம் மட்டுமா சர்க்கரை வியாதி இருக்கிறது என்ற கேள்வியை நானும் உங்களிடம் கேட்கிறேன். உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாம்.
வரலாற்றுத் தகவல் ரீதியாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்தியர்கள் நீரிழிவு நோயைப் பற்றி பதிந்து இருக்கின்றனர். மேலும் பண்டைய இந்தியாவில், மனிதர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனிதர்களை வைத்தே பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதாவது, மனிதனின் சிறுநீரில் இருந்து தான் சர்க்கரை பரிசோதனையை மேற்கொண்டார்கள். ஒருசிலர் சிறுநீர் கழித்த இடத்தில் மட்டும் எறும்பு வந்து மொய்க்கும். அதை வைத்து அந்த நபருக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறதுஎன்றும், அதன் பாதிப்பால் அவர்கள் இறந்து போகின்றனர் என்பதையும் தெரிந்துகொண்டார்கள்.
சர்க்கரை வியாதி என்றால் என்ன?
மனிதர்களின் உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யவில்லை என்றாலோ அல்லது உடலில் இருக்கும் இன்சுலினுக்கு போதுமான அளவு உடல் எதிர்வினையாற்றவில்லை என்ற சூழல் உடலில் ஏற்படும் போது மட்டுமே, மருத்துவர்கள் சர்க்கரை வியாதி இருக்கிறது என்பார்கள்.இப்படி பல காலமாக மனிதர்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. அதனால் இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது என்ற மாதிரியான வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம். பலகாலமாக மருத்துவத்துறையும் சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், முதல் முறையாக 1920ல் மட்டுமே இன்சுலின் குறைவதற்கு மருந்து மாத்திரைகளை கண்டுபிடித்தார்கள். 1950க்கு பிறகு தான் பலவிதமான சிகிச்சை முறைகளையும், மருந்துகளையும் மருத்துவத்துறை மக்களுக்கு தெரியப்படுத்தியது.
இன்சுலின்தான் பிரச்னை என்று தெரிந்து விட்டது. இன்சுலின் எந்த இடத்தில் இருந்து பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம். அதாவது, இன்சுலின் என்பது எங்கிருந்து வருகிறது என்றால், கணையத்தில் இருந்து வருகிறது. கணையத்தில் இருந்து இன்சுலின் வந்தாலும், அதற்கான வேலை மிக முக்கியமானது. அதாவது, நாம் சாப்பிடும் சாப்பாட்டிலிருக்கும் குளுக்கோஸ் தான் நம் உடலுக்கான எரிசக்தியாகும். அதாவது வண்டிக்கு பெட்ரோல் எந்தளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு நம் உடலுக்கு குளுக்கோஸ் முக்கியம். வண்டிக்கு பெட்ரோல் போட்டு தேவையான அளவு ஓட்டி விட்டு நிறுத்தி விடுவோம். மறுபடியும் வண்டியை எடுக்கும் போது, அந்த பெட்ரோல் வண்டிக்குள் பத்திரமாக இருக்கும்.
அதே போல் குளுக்கோஸும் ரத்தத்தில் கலந்து நாம் வேலை செய்யும் போது தீர்ந்து விடும். அப்படி முழுவதும் தீர்ந்து விடாமல் இருப்பதற்கு, இன்சுலின் கிளைகோஜன் என்ற முறையில் கல்லீரலிலும், தசைகளிலும் சேர்த்து வைத்து விடும். அதனால் தான், நாம் சில நாட்கள் அல்லது சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும், உடலின் தேவைக்கேற்ப இன்சுலின் குளுக்கோஸை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.
மேலும் உடலை திடப்படுத்துவதற்கும், உடலை வளர்ப்பதற்கும் இன்சுலின் குளுக்கோஸை புரோட்டீன் மற்றும் கொழுப்பாக மாற்றியும் வைத்திருக்கும். இப்படியாக நம்முடைய உடலின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் இன்சுலின் மிகவும் தேவையானதாக இருக்கிறது. இந்தளவிற்கு முக்கியத் தேவையாக இருக்கும் ஹார்மோன் சரியாக வேலை பார்க்காமல் இருந்தாலோ அல்லது இல்லாமல் இருந்தாலோ சர்க்கரை நோய் இருக்கிறது என்பதை மருத்துவர்கள் தெரிவித்து விடுவார்கள். அதனால் தான், சர்க்கரை நோய் மிக முக்கியமான நோயாக மருத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடான சீனா சர்க்கரை நோயில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது என்பதையும் மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோய்க்கு மருந்து என்று புரிதலில் இருந்து, தற்போது சர்க்கரை நோயில் தான் எந்த வகையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதைக் கூறுங்கள் என்று மருத்துவரிடம் கேட்குமளவிற்கு மக்கள் வருகிறார்கள். சர்க்கரை வியாதியில் ஏன் இத்தனை வகைகள் இருக்கின்றன என்பதையும் நாம் பார்ப்போம்.
சர்க்கரை வியாதியின் வகைகள்?
சர்க்கரை வியாதியில் பல வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம். டைப் 1 மற்றும் டைப் 2 மற்றும் கர்ப்பகால சர்க்கரை வியாதி என்றிருக்கிறது. டைப் 1 என்பது குழந்தைகளைப் பாதிக்கும் முறையாகும். குழந்தைகளின் கணையத்தில் இன்சுலினை உருவாக்கக்கூடிய பீட்டா செல்ஸ் முற்றிலும் இல்லாமல் இருக்கும். அந்த பீட்டா செல் இல்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்கு இன்சுலின் என்ற ஹார்மோன் அவர்களுக்கு வராது. அதனாலே சர்க்கரை வியாதியால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு அவர்களுக்கு இன்சுலின் செலுத்தினால் மட்டுமே சர்க்கரை வியாதியினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசியின் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.
மருந்து மாத்திரைகள் இன்னும் டைப் 1 சர்க்கரை வியாதிக்கு கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகளும், ஆய்வுகளும் தீவிரமாக மருத்துவத்துறையில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.டைப் 2 என்பது பெரியவர்களுக்கான சர்க்கரை வியாதியாகும். இந்த வகையைத் தான் இன்றைக்கு பலரும் சர்க்கரை வியாதி இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது டைப் 2 வில் இன்சுலின் என்ற ஹார்மோன் வருகிறது. ஆனால், அதன் செயல்பாடுகள் சரிவர செய்ய முடியவில்லை. இன்சுலின் ஹார்மோன் உடலில் சேர்த்து வைப்பதையும், உடலை வளர்த்தெடுப்பதிலும் பல விதங்களில் செயல்படுத்துகிறது.
அப்படி செய்யும் போது, உடலில் ஒரு சில இடங்களில் இன்சுலின் தோல்வியடைந்து விடுகிறது. அப்படி தோல்வியடையும் போது, உடலில் இருக்கும் பீட்டா செல் கஷ்டப்பட்டு இன்சுலினை செயல்பட வைக்கும். அதுவும் ஒரு கட்டத்தில் உடலில் பீட்டா செல்லும் இறந்து விடும். அதனால் தான், இன்சுலின் சரிவர வேலை செய்ய முடியாமல், டைப் 2 சர்க்கரை வியாதியை உண்டு பண்ணுகிறது. டைப் 2 சர்க்கரை வியாதியை சரி செய்வதற்கு முதலில் மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிலும் சரிவரவில்லை என்றால் மட்டுமே, இன்சுலின் ஊசியினை பரிந்துரைப்பார்கள்.
கர்ப்பகால சர்க்கரை வியாதியும் டைப் 2 போன்றதாகும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு இயல்பாகவே இன்சுலின் வேலை செய்யும் திறன் குறைந்து விடும். அதனால் பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இன்சுலின் தேவை அதிகரிப்பதாலும், செயல்பாடுகள் குறைவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு பெரும்பாலும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் ஊசி தான் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால், சில நேரத்தில் இந்த சர்க்கரை வியாதியால் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மகப்பேறு மருத்துவர்கள் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை தொடர்ந்து சரிபார்த்துக் கொள்வார்கள். ஒருசிலரின் உடல்நல பிரச்னைகளை வைத்து ஒருசில மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி, பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடனே சரியாகி விடும்.
குழந்தை பிறந்ததும் பெண்ணின் உடலில் இன்சுலின் வேலை செய்யும் திறன் இயல்புக்கு வந்து விடும். அதனால் பயப்படத் தேவையில்லை. ஒருசில பெண்களுக்கு மட்டும் சர்க்கரை வியாதி தொடர்ச்சியாக இருந்து விடும். அவர்களும் மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து மாத்திரைகள் மூலமும், முறையான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் அவர்களுக்கும் சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும்.
பலவகையான சர்க்கரை வியாதிகள் இருந்தாலும், இந்த மூன்று வகையில் தான் பெரும்பாலான மக்களுக்கு சிகிச்சை தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.இந்த கட்டுரை முழுக்க இன்சுலின் தன்மையைப் பற்றியும், சர்க்கரை வியாதியின் முதல் சிகிச்சை முறையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். அடுத்து வரும் கட்டுரையில் இன்னும் தெளிவாக சர்க்கரை வியாதியால் ஏற்படும் பிரச்னைகளையும், அறிகுறிகளையும் தெளிவாக தெரிந்து கொள்வோம். அதனால் இனி, உங்களிடம் யாராவது வந்து சர்க்கரை வியாதி ஒன்றும் பெரிய வியாதியில்லை என்று சொன்னால், உடனே கூறி விடுங்கள், உடலில் ஒரு ஹார்மோன் செயல்பாடு குறைவது உடல்நலத்திற்கு சரியானதல்ல என்றும், அதனால் சர்க்கரை வியாதிக்கு சரியான சிகிச்சை தேவை என்று தொடர்ந்து கூறுவோம்.
The post நோய் நாடி நோய் முதல் நாடி appeared first on Dinakaran.