×

வீடுகளுக்கே சென்று ரேஷன் விநியோகம், 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் : பேரவையில் அமைச்சர்கள் சொன்ன அறிவிப்புகள்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அமைச்சர் சக்கரபாணி : “தமிழ்நாட்டில், வீடுகளுக்கே நேரடியாக சென்று நியாய விலைப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதுபோல், தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 20ம் தேதி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.”

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: “தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. தேவையை விட அதிகமாக சுகாதார நிலையங்களை அமைத்து, இலக்கை எட்டிவிட்டீர்கள், இனிமேல் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்காதீர்கள் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.இருந்தாலும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளோம்!”

அமைச்சர் செந்தில் பாலாஜி :“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்புகள் விரைவில் வழங்கப்படும்“.

அமைச்சர் சிவசங்கர் : “சென்னையில் ஒரு சில ஆட்டோ சங்கங்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும்; சென்னையில் குளிர்சாதன பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் ரூ.2,000 பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது“.

அமைச்சர் ராஜகண்ணப்பன் : “பால் குளிரூட்டும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?” என்று உறுப்பினர் நந்தகுமார் கேள்விக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பதிலில், “பால் விற்பனையில் ரூ.16 குறைவாக வழங்கி வருகிறோம்.தனியார் பால் ரூ. 56-க்கு, ஆவின் ரூ.40-க்கு விற்கனை செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தை நட்டம் இல்லாமல் நடத்த வேண்டும்.பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது”

The post வீடுகளுக்கே சென்று ரேஷன் விநியோகம், 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் : பேரவையில் அமைச்சர்கள் சொன்ன அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Minister ,Chakarapani ,Tamil Nadu ,Andhra ,Telangana ,Karnataka ,
× RELATED சொல்லிட்டாங்க…