×

“தமிழகத்தின் சாபக்கேடு அண்ணாமலை’’ முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு பார்…: அமைச்சர் பி.கே. சேகர்பாபு சவால்

பெரம்பூர்: தமிழகத்தின் சாபக்கேடு அண்ணாமலை, நீ முடிந்தால் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு பார் என்று அமைச்சர் பி.ேக.சேகர்பாபு சவால்விட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, திருவிக. நகர் தெற்கு பகுதி சார்பில், ஓட்டேரி வாழைமா நகர், புளியந்தோப்பு கிரே நகரில், ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் இன்று காலை கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதில், தாயகம்கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற டூப் போலீஸ் இல்லை. இதுபோன்ற கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பதால் காவல்துறையினருக்கு தூக்கம் இருக்காதுதான்.

தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லையென்பதால் தமிழக போலீசாருக்கு இனி தூக்கம் இருக்காது என்கிறார். ஒரு கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு. அரசியலில் நாகரீகத்தை துறந்து சாலையில் கச்சேரி பாடுபவர்கள் போல் அவர் பேசுவதற்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது. எத்தனையோ வழக்குகளை சந்தித்த இயக்கம் திமுக. திமுகவிற்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் யாரும் அச்சப்பட்டு வீட்டில் அமரும் இயக்கம் திமுக இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலில் களத்திற்கு வரட்டும். தமிழ்நாட்டின் பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உரிமை, கொள்கை, கோட்பாடுகளில் யார் உறுதியோடு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மத்திய அமைச்சர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி பார்க்க முடிந்தால் அனுப்பி பாருங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் வரை எந்த அணியாலும் ஆட்சியை அசைக்க முடியாது. தேர்தலில் வைப்பு நிதியை தக்கவைத்துக்கொள்ள போராடும் ஒரு கட்சியை பார்த்து நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாஜகவை பார்த்து அச்சப்படும் அளவிற்கு திமுகவினர் கோழைகள் அல்ல. திமுக ஒன்றும் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை நடத்தவில்லை. ஒரு கண்ணத்தை அறைந்தால் மறு கண்ணத்தை காண்பிக்க. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

முடிந்தால் அவரை நாள் குறித்து வரக் கூறுங்கள் அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் இல்லாமல் திமுக தொண்டர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பது தெரியும். திருச்செந்தூரில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்போதே சிலர் வந்து அவரது மனைவியிடம் பேசி பேட்டியளிக்க கூறுகின்றனர். கூட்ட நெரிசலால் உயிரிழப்பு நிகழவில்லை. கோயிலின் பாதுகாப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. திருச்செந்தூர் கோயிலின் பணிகளுக்கு அவதூறு கற்பிக்கும் வகையில் இயற்கை மரணங்களுக்கு துறை மீது கலர்பூச முற்படுபவர்களின் நாடகம் எடுபடாது. இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதலமைச்சர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். இவ்வாறு தெரிவித்தார்.

 

The post “தமிழகத்தின் சாபக்கேடு அண்ணாமலை’’ முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு பார்…: அமைச்சர் பி.கே. சேகர்பாபு சவால் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chief Minister ,Minister ,B. K. Sekarpapu ,Perampur ,Tamil Nadu ,Sabakeda Annamalai ,P.E. K. Sekarpapu ,Chief Minister of Tamil Nadu ,K. ,Stalin ,Humanist Festival of the People's Chief ,Dimuka ,Chennai ,
× RELATED மின்சாரம் வாழ்க்கையின் ஒரு...